×

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்த தம்பதி குடும்பத்தினருடன் ஓடும் ரயிலில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை-மனைவி, மகளுக்கு தீவிர சிகிச்சை

திருமலை : ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அதோனி ரயில் நிலையத்தில் பெங்களூரில் இருந்து தாதருக்கு நேற்று அதிகாலை ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் பயணம் செய்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதை பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயிலை நிறுத்தி ரயில் பயணிகள் மற்றும் போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அதோனி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பத்மநாபம்(59), அவரது மனைவி செல்வி(52), மகள் ஜீவிதா(30) என்பதும், இவர்கள் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் வாழ்கையில் விரக்தி அடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். மூவரும் அதோனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கர்னூல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி பத்மநாபம் நேற்று மதியம் இறந்தார். பத்மநாபனுக்கு 2 மகள்கள் இருந்த நிலையில் மூத்த மகள் கொரோனாவால் ஏற்கனவே இறந்தார். இளைய மகள் ஜீவிதாவை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரை சேர்ந்த மகேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மகேஷ் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததால் ஜீவிதா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

வாழ்க்கையில் அனைத்து துன்பங்கள் நிறைந்து எதிர்கொள்ள முடியாததால் மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக ரயிலில் பெங்களூர் சென்றனர். ஆனால் அங்கு தற்கொலை செய்து கொள்ள முடியாததால் பெங்களூரில் இருந்து தாதர் செல்லும் ரயிலில் ஏறினர். ரயில் ஆந்திராவில் கர்னூல் மாவட்டம் அதோனிக்கு வந்தபோது தற்கொலை செய்து கொள்வதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்ததாக தெரிவித்தனர். தாய் மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதோனி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்த தம்பதி குடும்பத்தினருடன் ஓடும் ரயிலில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை-மனைவி, மகளுக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Peranambati, ,Vellore district ,Tirumalai ,Bangalore ,Dadar ,Karnool District Adoni Railway Station ,Andhra State ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பைக் மோதியதில்...