×

கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் ஜாமீனில் வெளிவந்தனர்பாளை சிறை முன் பா.ஜ. –காங்., போட்டி கோஷத்தால் பரபரப்பு

நெல்லை, ஏப். 12: பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வெளியே நேற்று பா.ஜ., மற்றும் காங்கிரசார் போட்டி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ. அலுவலகத்தை கடந்த 3ம் தேதி குமரி காங்கிரசார் முற்றுகையிட்ட போது தள்ளுமுள்ளு மற்றும் அடிதடி ஏற்பட்டது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ. தலைவர் தர்மராஜ், நெல்லை மாவட்ட பா.ஜ. முன்னாள் தலைவர் மகாராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். காங்கிரஸ் தரப்பில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், டைசன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரும் பாளை மத்திய சிறையிலிருந்து நேற்று காலையில் ஜாமீனில் வெளியே வந்தனர்.

சிறையில் இருந்து வெளிவந்த பா.ஜ. நிர்வாகிகளுக்கு, நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர். காங்கிரஸ் நிர்வாகிகளை நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாநகர் சங்கரபாண்டியன், கிழக்கு ஜெயக்குமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் காமராஜ், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு (எ) லெனின் பிரசாத், பொதுக்குழு உறுப்பினர் வி.பி.துரை, இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் போத்திராஜ் வினோத், நிர்வாகிகள் யோபு, ரில்வான், ஜெகநாதன் உள்ளிட்ட பலர் அங்கு திரண்டு சிறையில் இருந்து வெளியே வந்த குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை வரவேற்றனர்.

அப்போது பா.ஜ. வினர் ‘பாரத் மாதாவுக்கு ஜே, பாரத பிரதமர் மோடி வாழ்க’ என்றும், காங்கிரசார் ‘வருங்கால பாரத பிரதமர் ராகுல் வாழ்க’ என மாறிமாறி போட்டிப்போட்டு கோஷங்கள் எழுப்பியதால் பாளை சிறை எதிரேயுள்ள சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்காக நின்ற மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து வெளியேற கேட்டுக் கொண்டனர். இரு கட்சியினர் கோஷத்தால் பாளை சிறையின் வெளியே பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. பின்னர் போலீசார் இரு கட்சியினரையும் சமாதானப்படுத்தியதோடு அங்கிருந்து வெளியேற்றினர்.

The post கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் ஜாமீனில் வெளிவந்தனர்
பாளை சிறை முன் பா.ஜ. – காங்., போட்டி கோஷத்தால் பரபரப்பு
appeared first on Dinakaran.

Tags : Palai Jail ,Nellie ,Balayankota Central Jail ,BJP ,Dinakaran ,
× RELATED 7, 8ம்தேதி நடைபெற இருந்த உதவி...