×

தூத்துக்குடியில்ஏப்.21 முதல் மே 1 வரை புத்தகம், நெய்தல் கலைத்திருவிழாகலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

கோவில்பட்டி, ஏப். 12: தூத்துக்குடியில் ஏப்.21 முதல் மே 1ம் தேதி வரை புத்தகத்திருவிழா மற்றும் நெய்தல் கலைத்திருவிழா நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார். கோவில்பட்டி வித்யபிரகாசம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி மற்றும் ஆரம்ப கால பயிற்சி மையத்தின் 20ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தொழிற் பயிற்சிக்கான கண்காட்சியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவில்பட்டி வித்யபிரகாசம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஊக்கப்படுத்தப்பட்டு கற்றல் – கற்பித்தல் உபகரணங்களை அவர்களே சுயமாக உருவாக்கியுள்ளனர். இப்பள்ளியில் பயின்று பயிற்சி பெற்ற மனவளர்ச்சி குன்றிய மாணவர்களால் தற்போது வாழ்க்கையில் சுயமாக சிந்திக்கவும், செயல்படவும் முடிகிறது. அதுமட்டுமல்லாமல் கைவினைப்பொருட்கள், கீ செயின் மற்றும் விளையாட்டு பொருட்களை மாணவர்கள் தயாரிக்கின்றனர். மேலும் பினாயில் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4வது புத்தகத்திருவிழா மற்றும் நெய்தல் கலைத்திருவிழா, வரும் 21ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. புத்தகத்திருவிழாவுடன் ஏப்.28, 29, 30, மற்றும் மே 1ம் தேதியில் நெய்தல் கலைத்திருவிழாவும் நடைபெற உள்ளது. கலைத்திருவிழாவில் தூத்துக்குடி மட்டுமின்றி தென்தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக்கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. புத்தகத்திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் சிறப்பு அழைப்பாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த புகைப்படங்களின் கண்காட்சியும் நடக்கிறது. புகைப்படக் கண்காட்சிக்கு 18 வயதிற்குட்பட்ட கலைஞர்களின் படைப்புகள் ஒரு பிரிவாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடைபெற உள்ளது. சிறந்த புகைப்படங்களை www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் மிகச்சிறந்த புகைப்படங்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.50,000 மற்றும் ஆறுதல் பரிசாக 10 புகைப்படங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் வழங்கப்படும்.புத்தகத் திருவிழாவையொட்டி கோவில்பட்டி கி.ரா. மணிமண்டபத்தில் கரிசல் இலக்கியங்கள் குறித்தும், எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் சுதந்திர போராட்டம் தொடர்பான படைப்புகள் குறித்தும், திருச்செந்தூரில் சுதந்திரப் போராட்டத்தில் ஊடகத்துறையின் பங்களிப்பு தொடர்பாகவும் கருத்தரங்கங்கள் மற்றும் விவாதங்கள் நடைபெறுகிறது. மண் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சிகள் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் 6 நாட்கள் நடக்கிறது.

மேலும் புத்தக வாசிப்பின் அவசியம் மற்றும் நமது கலாசாரங்கள் குறித்து உரையாடல்களும் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று மண் சார்ந்த மரபுகளை அறிந்து பயன்பெற வேண்டும். தூத்துக்குடி புத்தகத்திருவிழாவில் 110 புத்தக அரங்குகள் மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் 10 அரங்குகள் என மொத்தம் 120 அரங்குகள் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, நகராட்சி தலைவர் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், கோவில்பட்டி வட்டாட்சியர் சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், வித்யபிரகாசம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஐடா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடியில்
ஏப்.21 முதல் மே 1 வரை புத்தகம், நெய்தல் கலைத்திருவிழா
கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Weaving ,Senthilraj ,Kovilpatti ,Book Festival and ,Weaving Art Festival ,Tuticorin ,Collector ,Dinakaran ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது