×

கரூரில் ஜவுளி தயாரிப்பை ரூ.25 ஆயிரம் கோடிக்கு உயர்த்த முடிவு: உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கூட்டத்தில் திட்டம்

கரூர், ஏப். 12: கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிட அரங்கத்தில் சந்திப்புக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய ஜவுளி அமைச்சகத்தின் வர்த்தக ஆலோசகர், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் சுப்ரா தலைமை வகித்தார். கூடுதல் ஆணையர் சந்தோஷ்குமார்சிங், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் ,முன்னாள் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மெட்ரோ கோபாலகிருஷ்ணன் பேசியது, கைத்தறிக்கு புகழ்பெற்ற கரூர் தற்போது வீட்டு உபயோக ஜவுளிகளுக்கு புகழ் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 830 யூனிட்கள், 400 ஜவுளி ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். ரூ.9,000 கோடிக்கு ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது.

இதில் ரூ.5,000 கோடிக்கு ஏற்றுமதி நடைபெறுகிறது. இதனை வரும் 2030ம் ஆண்டில் ரூ.25,000 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் நேரடியாகவும், 3 லட்சம் பேர் மறைமுகவாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கரூரில் சுத்திகரிப்பு நிலையம் இருந்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும் விரைவாக செயல்பட முடியும். எனவே கரூரில் ப்ராசஸிங் யூனிட், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, வளர்ச்சி துறை, ட்ரேடு சென்டர் ஆகியவை அமைக்கவேண்டும் என்றார். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை இந்திய ஜவுளி அமைச்சகத்தின் வர்த்தக ஆலோசகர், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் சுப்ராவிடம் வழங்கினார். ஆணையர் சுப்ரா பேசியது, பிரச்சனைகளை மட்டும் தெரிவிக்காமல் அதற்கான தீர் வுகளையும் கூறுங்கள். ஏனென்றால் அதுகுறித்து உங்களுக்கு தான் தெரியும்.

பொதுசுத்திகரிப்பு திட்டத்தை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டீர்கள். பிஎம் மித்ரா திட்டத்தில் விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. இங்குள்ளவர்கள் இதனை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். பிஎல்ஐ (உற்பத்தி தொடர்பான மானியம்) 2 திட்டத்தில் குறைந்த முதலீட்டில் தொடங்கப்படும் தொழில்களுக்கு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தை கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். கைத்தறி ஏற்றுமதி வளர்ச்சி கழக செயல் இயக்குநர் என்.தர், கரூர் ஜவுளி பூங்கா தலைவர் எம்.நாச்சிமுத்து ஆகியோர் பேசினர். இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கூடுதல் ஆணையர் சந்தோஷ்குமார் பங்கேற்றார். செயலாளர் எஸ்.சுகுமார் வரவேற்றார். இணை செயலாளர் ஏ.சேதுபதி நன்றி கூறினர். கரூர் ஜவுளி பூங்கா, பூஜ்ய கழிவு முறையில் செயல்படும் சாயக்கழிவு ஆலை ஆகியவற்றை முன்னதாக இந்திய ஜவுளி அமைச்சகத்தின் வர்த்தக ஆலோசகர், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் சுப்ரா, கூடுதல் ஆணையர் சந்தோஷ்குமார்சிங் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் கூட்டத்திற்கு பிறகு வெங்கமேட்டில் கைத்தறி உற்பத்தி பிரிவுகளை (யூனிட்) பார்வையிட்டனர்.

The post கரூரில் ஜவுளி தயாரிப்பை ரூ.25 ஆயிரம் கோடிக்கு உயர்த்த முடிவு: உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கூட்டத்தில் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur Textile Manufacturers and Exporters Association Building ,Dinakaran ,
× RELATED கரூர் காந்தி கிராமத்தில் பராமரிப்பு...