×

சர்வதேச விளையாட்டு நகரத்திற்கு கலைஞர் பெயர்: திமுக எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் வலியுறுத்தல்

சென்னை: சர்வதேச விளையாட்டு நகரத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் என்று திமுக எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் வலியுறுத்தி பேசினார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்டச் செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆகிய துறைகளின் மானியக் ேகாரிகை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பழனி தொகுதி உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார்(திமுக) பேசியதாவது: திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், கபாடி, சிலம்பம் போன்ற விளையாட்டுகளெல்லாம் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டன. இதற்கு முன்பு, முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 10 பிரிவுகளின் கீழ் தான் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, தற்போது 15 பிரிவுகளின்கீழ் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பையில் எங்கள் மாவட்டத்தில் 13 விளையாட்டுகளின் கீழ் 5 பிரிவுகளில் 6,073 வீரர்களும், 3,479 வீராங்கனைகளுக்கென மொத்தம் 9,552 நபர்கள் ஒரு மாவட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். மாநில அளவில் 3,71,351 வீரர்களுக்கு, அந்த முதலமைச்சர் கோப்பை போட்டிகள் கலந்து கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சரிடத்திலே ஒரு வேண்டுகோள். நீங்கள் உருவாக்கியிருக்கிற சர்வதேச விளையாட்டு நகரத்திற்கு தலைவர் கலைஞரின் பெயரை சூட்டிட வேண்டும்.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இருக்கக்கூடிய ஒரு கேலரிக்கு நீங்கள் கலைஞரின் பெயரை பெற்றுத் தந்தீர்களோ, அதேபோல் அந்த நகரத்திற்கும் கலைஞரின் பெயரை நீங்கள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post சர்வதேச விளையாட்டு நகரத்திற்கு கலைஞர் பெயர்: திமுக எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DMK MLA ,IP ,Senthilkumar ,Chennai ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED சிவகிரி அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது