×

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; கல்லூரி இயக்குநர் உள்பட 6 பேரிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை: மாணவிகள், பேராசிரியர்களிடம் இன்று நடக்கிறது

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணைய எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், முதல்வர் என 6 பேரிடம் தனித்தனியாக 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். மாணவிகளுக்கு தேர்வு நடந்ததால் இன்று பிற்பகல் அவர்களிடம் நடத்தப்பட உள்ளது.
சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள் பலர் பேராசிரியர் ஹரிபத்மன் உள்பட 4 பேர், பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். மாணவிகளின் நீண்ட போராட்டத்துக்கு பிறகு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, போராட்டம் நடத்திய மாணவிகளிடம் கடந்த 31ம் தேதி நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலமாக பதிவு செய்தார். போலீசில் புகார் அளிக்கவும் அறிவுரை வழங்கினார்.

அதன்படி கேரளவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், 3 பிரிவுகளின் கீழ் பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அதேநேரம், பேராசிரியர் போல் உதவி நடன கலைஞர்களான சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், நாத் ஆகியோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் மாணவிகளின் புகாரை தொடர்ந்து பேராசிரியர் உள்பட 4 பேரை அதிரடியாக கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. மற்றவர்கள் நடவடிக்கை இல்லை. இதற்கிடையே கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் மாணவிகளின் புகாரை விசாரணை நடத்த தனியாக முன்னாள் நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண் ஆகியோர் தலைமையில் விசாரணை குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதற்காக மாநில மனித உரிமை ஆணைய எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் டிஎஸ்பி குமார், சந்திரசேகர், பெண் இன்ஸ்பெக்டர் என 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன்படி எஸ்பி தலைமையிலான விசாரணை குழு திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணையை தொடங்கியது. கல்லூரியில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து இருந்ததால், மாணவிகளிடம் விசாரணை நடத்த வேண்டாம் என் கல்லூரி நிர்வாகம் சார்பில் மாநில மனித உரிமை ஆணைய குழுவினரிடம் கேட்டுக்கொண்டனர்.அதன்படி எஸ்பி மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர், கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி, கல்லூரி முதல்வர் பகல ராம்தாஸ் உள்பட 6 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். 2 மணி நேரம் நடந்த விசாரணையின் போது, பாலியல் தொடர்பாக பேராசிரியர்கள் மீது மாணவிகள் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, இதுவரை எத்தனை மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

அதன் மீது குற்றம் செய்த பேராசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, புகார் அளித்த மாணவிகளை நிர்வாகம் மிரட்டியதா, கல்லூரி விடுதியில் தங்கி உள்ள மாணவிகளுக்கு என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாத இரவு நேரங்களில் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி கொடுத்தது ஏன் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதிலை மனித உரிமை ஆணைய குழு பதிவு செய்து கொண்டது. அதைதொடர்ந்து விசாரணை குழுவினர் 1 மணிக்கு கலாஷேத்ரா கல்லூரியில் இருந்து புறப்பட்டு சென்றனர். மாணவிகளுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்வு முடிவடைந்ததும், மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் பாலியல் தொடர்பாக மீண்டும் மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.

The post கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; கல்லூரி இயக்குநர் உள்பட 6 பேரிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை: மாணவிகள், பேராசிரியர்களிடம் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,Human Rights Commission ,Chennai ,State Human Rights Commission ,SP ,Maheswaran ,
× RELATED கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான...