×

கலங்கரை விளக்கம் –பட்டினப்பாக்கம் இடையிலான லூப் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப் போகிறீர்கள் என்று சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரும் 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைப்பதாலும், மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை சாலையில் நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

மனுவில், மீன் கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற பதிவுத்துறை கோரியுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, மாநகராட்சியின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் மீன் கடைகள் நடத்தும் மீனவர்களுக்காக 9 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக மீன் சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது. 6 மாதங்களில் பணிகள் முடிந்து விடும்.

அதுவரை மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தற்காலிகமாக போக்குவரத்தை முறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து, உரிமம் இல்லாத உணவகங்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், சாலை ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது. சாலையில் ஆக்கிரமிப்புக்கு தான் அனுமதி அளிக்கப்படுகிறதே தவிர, போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்ற நிலை உள்ளது, என்றனர்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மீனவர்களுக்கான மாற்று ஏற்பாடு விரைவில் முடிந்துவிடும். அப்போது, அந்த சாலையில் போக்குவரத்தில் சிக்கல் எதுவும் இருக்காது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கடந்த ஜனவரி 21ம் தேதி சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர், சட்டம் – ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர், போக்குவரத்து இணை கமிஷனர், உணவு பாதுகாப்பு மருத்துவ அதிகாரி, மாவட்ட வருவாய் அதிகாரி, மண்டல வருவாய் அதிகாரி ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

அதில் தற்காலிக கூடாரம் போட்டு மீன் விற்பனை செய்வதை அகற்றுவது, போலீஸ் பாதுகாப்பு, 10 பேர் அடங்கிய தனி போக்குவரத்து போலீசார் நியமனம் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு மீன் கடைகள் ஒழுங்குபடுத்துதல், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மீன் மார்க்கெட் பணி 55 சதவீதம் முடிவடைந்துள்ளது, என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. லூப் சாலையின் மேற்கு பகுதியில் சாலை மட்டுமல்லாமல், நடைபாதையையும் ஆக்கிரமித்து சிறு உணவகங்கள் செயல்படுகின்றன. மீன் கழிவுகள் கொட்டுவதற்கா அந்த சாலை உள்ளது, நடைபாதையை ஆக்கிரமித்து உணவகங்களுக்கு எப்படி உரிமம் வழங்கப்பட்டது, பொது சாலையை ஆக்கிரமிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் சமரசம் செய்ய முடியாது. தமிழக அரசின் நோக்கமே சிங்கார சென்னை ஆக்குவது தானே, மீனவர்களை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதே நேரத்தில் சாலையில் ஆக்கிரமிப்பு செய்வதை நாங்கள் ஏற்க முடியாது.

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப் போகிறீர்கள், லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏப்ரல் 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். லூப் சாலையின் மேற்கு பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்கு பகுதியில் உள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்றும் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

  • விபத்து, நெரிசல்
    மெரினா லூப் சாலையை இருபுறமும் ஆக்கிரமித்து ஏராளமான மீன் கடைகள் வைக்கப்பட்டு உள்ளதுடன், அங்கு வரும் பொதுமக்களும் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. அவ்வப்போது, விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் காரும் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
  • லூப் சாலையில் மீன் கடைகள் நடத்தும் மீனவர்களுக்காக 9 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக மீன் சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது. 6 மாதங்களில் பணிகள் முடிந்து விடும். அதுவரை மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தற்காலிகமாக போக்குவரத்தை முறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • மாநகராட்சி செயற்பொறியாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, லூப் சாலையில் மீன் கடைகளை ஒழுங்குபடுத்துதல், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மீன் மார்க்கெட் பணி 55 சதவீதம் முடிவடைந்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலங்கரை விளக்கம் – பட்டினப்பாக்கம் இடையிலான லூப் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kalankarari ,Pattinapakkam ,Chennai ,Singarach Chennai ,Chennai Corporation ,Lighthouse ,Pattinpakkam ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...