×

தஞ்சாவூரில் கொத்தடிமைகளாக இருந்த 8 இருளர் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம்

செங்கல்பட்டு: தஞ்சாவூரில் கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது, அவர்கள் கூலியை பெற்று தரக்கோரி மனு அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் மதுராந்தகம் தாலுகாவை சேர்ந்த செல்வராஜ், சித்ரா, வெங்கடேசன், வசந்தி, ராஜா, பவானிதேவி, சேகர், விஜி, மகாலட்சுமி சுரேஷ், சக்திவேல், முத்து, குட்டி, மீனா, சந்துரு, வெண்ணிலா உள்ளிட்ட 8 குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் உள்பட 18 பேரை கரும்பு வெட்டும் தொழிலுக்காக குடும்பத்துடன், கடலூர் மாவட்டம், பண்ருட்டி ரயிலடி, திருவீதியை சேர்ந்த நாகராஜ் என்ற மேஸ்திரி செங்கல்பட்டு மாவட்டம் மதுர் கிராமத்திற்கு வந்து அதிக கூலி, தங்கும் வசதி, நல்ல உணவு போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறி முன் பணமாக 8 குடும்பத்திற்கும் சேர்த்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் மட்டும் கொடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு தோட்டங்களில் கரும்பு வெட்டும் கூலி தொழிலுக்காக கடந்த நவம்பர் மாதம் அழைத்து சென்றார்.

ஆனால், அங்கு கடந்த ஐந்து மாதங்களாக கடும் வெயிலில், குறிப்பிட்ட வேலை நேரம் என்றில்லாமல் காலை முதல் இரவு வரை கடுமையாக இவர்களை வேலை வாங்கியுள்ளனர். அவர்களை சுதந்திரமாக வைத்திருக்கவில்லை. எங்களுக்கு ஏதாவது காயம் பட்டாலோ, உடல்நிலை சரியில்லாமல் போனாலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லமாட்டார்கள். இரவில் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் தராமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் திறந்த வெளியில் உறங்க வைத்தனர். ஊருக்கு செல்வதற்கோ, வெளியில் செல்வதற்கோ, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட விடுமுறை இல்லாமல் வேலை வாங்கி வந்தனர்.

இந்த 5 மாத காலகட்டத்தில், உணவிற்காக ஒரு நபருக்கு முப்பது ரூபாயை தவிர வேறு எந்த பணமும் தரவில்லை. எங்களை கடுமையாக திட்டியும், மிரட்டியும் வந்தனர். எந்தவித உயிர் பாதுகாப்பும் இல்லாத சூழலில்,கடந்த மாதம் 3ம் தேதி நாங்கள் இரவோடு இரவாக நாங்கள் வேலை செய்த ஏலக்குறிச்சி, மாதா கோயில் சந்து அருகில் உள்ள கரும்பு தோட்டத்திலிருந்து தப்பி வந்துவிட்டோம். எங்களுடன் வேலை செய்த சுரேஷ் என்பவரின் மகன்கள் சக்திவேல் (13), முத்து (15) மற்றும் ஆணைகுளம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகள் சித்ரா (16) ஆகிய மூவரையும் பிணைக்கைதி போல் பிடித்து வைத்துள்ளார்கள்.

தற்பொழுது எங்களை திரும்பவும் வேலைக்கு வரும்படியும் அழைக்கின்றனர். இல்லாவிட்டால் வாங்கிய பணத்தை திருப்பி தரும்படியும் தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, கொலை மிரட்டலும் விடுகின்றனர். இதுகுறித்து, அவர்கள் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம், ‘‘இருளர் மக்களாகிய எங்களை இந்த கொத்தடிமை முறையிலிருந்து முழுமையாக விடுவிக்கவும், நாங்கள் வாங்கிய முன்பணத்திற்கும் பலமடங்காக உழைத்த கூலி பணத்தை பெற்று தர வேண்டும் என, மாவட்ட கலெக்டரிடம் மனு‌ அளித்தனர். இச்சம்பவத்தால், கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

The post தஞ்சாவூரில் கொத்தடிமைகளாக இருந்த 8 இருளர் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...