×

பிளஸ்2 விடைத்தாள் திருத்துவதில் தவறு நடந்தால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தேர்வுத்துறை எச்சரிக்கை

சென்னை: பிளஸ்1 மற்றும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் போது தவறுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கிற பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த மாதம் 13, 14ம் தேதிகளில் ெதாடங்கியது. இந்த தேர்வை சுமார் 17 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களின், முகப்பு தாள்கள் அகற்றப்பட்ட டம்மி எண்களுடன் 40 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் நேற்று முன்தினம் திட்டமிட்டபடி பணிகள் ெதாடங்கியது. மே 5ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும். இந்நிலையில், விடைத்தாள் திருத்துவதில் ஆசிரியர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விடைக்குறிப்புகளை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொண்டு விடைகளை திருத்த வேண்டும். மதிப்பெண் குறிப்பிடுவதில் பிழைகள், தவறுகள் ஏற்படக்கூடாது. மதிப்பெண்களை சரியாக குறிப்பிடாமல் புகார் வரும்பட்சத்தில் அல்லது கண்டுபிடிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் திருத்திய விடைத்தாள்களை கூர்ந்தாய்வாளர்கள் சரிபார்க்க வேண்டும்.

முந்தைய காலங்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு மேற்கொண்ட போது விடைத்தாளின் முந்தைய மதிப்பெண்களில் அதிக வேறுபாடுகள் கண்டறியப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. சில ஆசிரியர்கள் சில பக்கங்களை திருத்தாமல் விட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. விடைத்தாள் திருத்தும் அறையில் கவனச் சிதறல் இல்லாமல் திருத்த வேண்டும், மொபைல் போன்கள் கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பிளஸ்2 விடைத்தாள் திருத்துவதில் தவறு நடந்தால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தேர்வுத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் பெண்ணின் கண்ணில் மணலை கொட்டி பணப்பை கொள்ளை!