×
Saravana Stores

வீட்டுவசதி வாரிய அலுவலர்களை தரக்குறைவாக பேசிய பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்ட: வீட்டுவசதி வாரிய அலுவலர்களை தரக்குறைவாக பேசிய, துணைப்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் லட்சுமணசுவாமி தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் வேணுகோபால் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், துணைப் பதிவாளராக (வீட்டுவசதி) பணிபுரியும் உமாதேவி அலுவலக பணியாளர்களை தரக்குறைவாக பேசுவதோடு ஊழியர் விரோதப்போக்கை கையாண்டு, வஞ்சக போக்குடன் பணியாளர்கள் மீது பொய்யான ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டும். தனது உயர் அலுவலர்களைக்கூட இழிவாக பேசியும் அவர்களது ஆணைகளை செயல்படுத்தாமல், நிர்வாக பணிகளை முடக்கி வருகிறார். இவர் 2019ம் ஆண்டு முதன் முதலில் மயிலாடுதுறை கூட்டுறவு நகர வங்கியில் மேலாண்மை இயக்குநர் பணியில் சேர்ந்தார். இவர் பணிபுரிந்த அனைத்து பணியிடங்களிலும், பணியாளர்களுக்கும், உயர் அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும், பல பிரச்னைகளை ஏற்படுத்தி பல நிர்வாக சிக்கலை ஏற்படுத்தியதன் காரணமாக கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டார்.

மேலும், பணியில் சேர்ந்த நான்கு ஆண்டுகளுக்குள் இவரின் தவறான மற்றும் நிர்வாக அராஜக போக்கின் காரணமாக இவர் மீது ஆறு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் தற்போது செயலாட்சியர் பணி நியமனம் நடைபெறாததால் சங்கங்களின் நிர்வாக பணிகளில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர் தனது உயர் அதிகாரிகள் மீதும் பல்வேறு பொய்யான புகார்களை அரசுக்கு தெரிவித்துள்ளதால், இவர் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு உயர் அலுவலர்கள் கூட தயங்கி வருகின்றனர். கடந்த 4ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில், இவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் இயற்றப்பட்டு, அரசு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது.

அதன் மீது கூட்டுறவுத்துறை செயலர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் உமாதேவி மீது நடவடிக்கை மேற்கொண்டு ஆணை பிறப்பித்த நிலையில், அரசாணை வெளியாகாமல், தனது செல்வாக்கை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளார். இவர் பணியில் தொடரும் பட்சத்தில் அரசுக்கும், கூட்டுறவு துறைக்கும் அவப்பெயர் ஏற்படும் என்பதால் உமாதேவியை பணிநீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும், உமாதேவியை கண்டித்தும் கோஷமிட்டபடி கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மகேந்திரபாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

The post வீட்டுவசதி வாரிய அலுவலர்களை தரக்குறைவாக பேசிய பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Cooperative Department ,Chengalpatta ,
× RELATED மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் 560...