×

பா.ஜவில் குழப்பம்

தென்மாநிலங்களில் பா.ஜ ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலம் கர்நாடகம். தற்போது அங்கு பா.ஜ ஆட்சி தான் நடக்கிறது. மே 10ம் தேதி சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வேட்புமனுத்தாக்கல் தொடங்க இருக்கிறது. ஆனால் ஆளும் பா.ஜ வேட்பாளர் பட்டியல் தாமதமாகி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று ஒருவாரமாக சொல்லி வந்தனர். அத்தனை குழப்பம் அங்கு இருக்கிறது. கடைசியாக இப்போது வெளியாகி உள்ளது. 224 தொகுதிகள் கொண்ட அங்கு காங்கிரஸ் தற்போது 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இன்னும் 58 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டும். அந்த பட்டியலும் தயார் என்கிறார்கள். ஆனால் எப்போதும் களத்தில் முந்தி நிற்கும் பா.ஜ இப்போது விழிபிதுங்கி நிற்கிறது.

முன்னாள் முதல்வரும், கர்நாடகா பா.ஜவில் இப்போதும் கோலோச்சும் எடியூரப்பா, முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா ஆகியோர் இந்த முறை தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்து இருக்கிறார்கள். என்ன நெருக்கடி என்று தெரியவில்லை. எடியூரப்பாவை புறக்கணிப்பது அங்கு ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்து சமூக மக்களை அவமதிப்பது போன்றது என்று காங்கிரஸ் வேறு கொளுத்திப்போட்டு இருக்கிறது. இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ ஆட்சிமன்ற குழு கூட்டம் கர்நாடகா பா.ஜ வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறது. ேமாடி வந்து அமர்ந்தால் அன்று இரவே பட்டியல் வெளியிடப்படும். இதுதான் பா.ஜவில் வாடிக்கை. ஆனால் மோடி ஆலோசனை நடத்தி 3 நாட்கள் கடந்த பின்னும் பா.ஜ பட்டியல் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் குழப்பம் அதிகரித்து இருப்பதை காட்டுவதாக தேர்தல் வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

முதலில் இருந்தே கர்நாடகாவில் இந்த முறை பா.ஜ ஆட்சிக்கு வருவது சந்தேகம் என்ற செய்தி பரவியது. அதற்கு ஏற்றார்போல் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடந்து கொண்டு இருப்பதும், பட்டியல் வெளியாவதில் ஏற்பட்டுள்ள இத்தனை தாமதமும் கர்நாடக பா.ஜவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையும், பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள மோதலையும் வெளிப்படுத்தி இருக்கிறது. இத்தனைக்கும் மோடி கர்நாடகா தேர்தலை குறிவைத்து 10 முறைக்கு மேல் அங்கு சென்று வந்து விட்டார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பிரசாரத்தை முடுக்கி விட்டுவிட்டார். இத்தனை செய்தும் பா.ஜ முடங்கி கிடக்கிறது என்றால் அங்கு இடியாப்பச்சிக்கல் அதிகரித்து இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

அப்படித்தான் கர்நாடகாவில் இருந்துவரும் செய்திகளும் தெரிவிக்கின்றன. பா.ஜ பட்டியல் ரெடிதான், ஆனால் அதை வெளியிட தலைமை தான் தயங்கிக்கொண்டு இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இறுதியாக 189 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. முதல்வர் பொம்மை மீண்டும் தனது பாரம்பரிய தொகுதியில் போட்டியிடுகிறார். எடியூரப்பா தொகுதி அவரது மகனுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் பட்டியலில் 52 பேர் புதுமுகங்கள். 8 பேர் பெண்கள். 32 ஓபிசி,30 எஸ்சி, 16 எஸ்டி பிரிவினர் இடம் பெற்றுள்ளனர். பா.ஜவில் எல்லா மாநிலங்களிலும் மோடி வைத்ததுதான் சட்டம். ஆனால் இந்த தாமத்தை வைத்து பார்க்கும் போது கர்நாடகாவில் அப்படி இல்லை போலும்.

The post பா.ஜவில் குழப்பம் appeared first on Dinakaran.

Tags : Pa. Javille ,South States Pa. ,Karnataka ,Pa. Ja ,Pa ,. Javille ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...