×

சீசன் 16 ஐபிஎல் திருவிழா: டெல்லி கேப்பிடல்ஸ் ரன் குவிப்பு

புதுடெல்லி: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேப்டன் வார்னர், அக்சர் படேல் அரை சதம் விளாசியதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கணிசமான ஸ்கோரை எட்டியது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். வார்னர், ப்ரித்வி ஷா இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். ஷா 15 ரன்னில் வெளியேற, வார்னர் – மணிஷ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தது. மணிஷ் 26 ரன், யஷ் துல் 2, பாவெல் 4, லலித் யாதவ் 2 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, டெல்லி அணி 98/5 என திடீர் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், வார்னர் – அக்சர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். உறுதியுடன் போராடிய வார்னர் 43 பந்தில் அரை சதம் அடித்தார். மறு முனையில் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளி மும்பை பந்துவீச்சை சிதறடித்த அக்சர் 22 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தது.

ஜேசன் பெஹரண்டார்ப் வீசிய 19வது ஓவரில் அக்சர் 54 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), வார்னர் 51 ரன் (47 பந்து, 6 பவுண்டரி), குல்தீப் 0 (ரன் அவுட்), அபிஷேக் போரெல் 1 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அன்ரிச் 5 ரன் எடுத்து மெரிடித் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, டெல்லி அணி 19.4 ஓவரில் 172 ரன் குவித்து ஆல் அவுட்டானது. முஸ்டாபிசுர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் பெஹரண்டார்ப், பியுஷ் சாவ்லா தலா 3, மெரிடித் 2, ஷோகீன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது.

The post சீசன் 16 ஐபிஎல் திருவிழா: டெல்லி கேப்பிடல்ஸ் ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Season 16 IPL Festival ,Delhi Capitals' ,New Delhi ,Warner ,Axar Patel ,IPL ,Mumbai Indians ,Delhi ,Dinakaran ,
× RELATED நாட்டுக்கு எதிரான குற்ற செயல்களில்...