×

திருக்கோயிலில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்யப்பட்டதற்கான பத்திரங்களை கோயில் நிர்வாகிகளிடம்வழங்கினார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை: திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் மற்றும் மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டுப் பத்திரங்களை திருக்கோயில் நிர்வாகிகளிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (11.04.2022) திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் மற்றும் மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களிலுள்ள பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுத்து உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டுப் பத்திரங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருக்கோயில் அறங்காவலர்களிடம் வழங்கினார்.

2021-2022-ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், ”கடந்த பத்து ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுத்து உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி முதலீடு செய்திடும் வகையில் சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஓய்வு பெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.துரைசாமி ராஜு மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்கள் க.ரவிச்சந்திர பாபு, செல்வி ஆர். மாலா ஆகியோர் தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இப்பணிகளை கடந்த 13.10.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

அதன்படி, விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்று பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு மும்பை பாரத ஸ்டேட் வங்கியில் Gold Deposit Scheme–ல் நிரந்தர முதலீடு செய்யப்பட்டன. அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட சுத்தத் தங்கக்கட்டிகளின் மதிப்பு முறையே ரூ.10 கோடி மற்றும் ரூ.46.31 கோடி ஆகும். இதற்கான தங்க முதலீட்டு பத்திரங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அந்தந்த திருக்கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார். இதன் மூலம் ஆண்டிற்கு இருக்கன்குடி திருக்கோயிலுக்கு ரூ.24 லட்சமும், பெரியபாளையம் திருக்கோயிலுக்கு ரூ.1.04 கோடியும் வட்டித் தொகையாக வரபெற்று அந்தந்த திருக்கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 42 கிலோ 991 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மற்றும் மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 39 கிலோ 704 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றிடும் வகையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு முன்னிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளரிடம் ஒப்படைத்தனர்.

அதன்படி, பலமாற்று பொன் இனங்கள் மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு மும்பை பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டன. அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட சுத்தத் தங்கக்கட்டிகளின் மதிப்பு முறையே ரூ.17.39 கோடி மற்றும் ரூ.17.46 கோடி ஆகும். இதற்கான தங்க முதலீட்டு பத்திரங்களை இன்று (11.04.2023) ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் என்.கே.மூர்த்தி, மாங்காடு, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் மணலி ஆர்.சீனிவாசன் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்த தங்க முதலீட்டு பத்திரத்தின் மூலம் ஆண்டிற்கு திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.39.13 லட்சமும், மாங்காடு, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.39.92 லட்சமும் வட்டித் தொகையாக கிடைக்கபெற்று அந்தந்த திருக்கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு திருக்கோயில்கள் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் அர.சுதர்சன், பொ.ஜெயராமன், இரா.செந்தில்வேலவன், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் அறங்காவலர்கள் B.A.சந்திரசேகர் செட்டி, வளர்மதி, சாந்தகுமார், திருக்கோயில் துணை ஆணையர்கள்/ செயல் அலுவலர்கள் ஐ.முல்லை, பெ.கவெனிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருக்கோயிலில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்யப்பட்டதற்கான பத்திரங்களை கோயில் நிர்வாகிகளிடம்வழங்கினார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,P. K. Shekharbabu ,Chennai ,Thiruvekadu ,Arulmiku Devi Karumariyamman temple ,Mangadu ,Arulmiku Kamatsiyamman temple ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்