×

விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக மக்கள் பிரதிநிதியானவர் குரல் கொடுக்க வேண்டும்: வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல்காந்தி உரை

வயநாடு: நான் வயநாட்டை சேர்ந்தவன் இல்லை, இருந்தபோதிலும் மக்கள் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை கருதுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது என்ன என்று நான் பலமுறை சிந்தித்தது உண்டு. விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக மக்கள் பிரதிநிதியானவர் குரல் கொடுக்க வேண்டும் என்று வயநாடு மக்களவை தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்பது பெயருக்கு பின் வரும் சாதாரணமான ஒரு தகுதிதான்.எனது எம்.பி. பதவியை பறிக்கலாம், ஆனால் மக்கள் பிரதிநிதியாக நான் தொடருவதை பாஜகவினால் பறிக்க முடியாது. வயநாடு மக்களுக்கு என்ன தேவை என்பதற்காக போராடுபவன்தான் மக்கள் பிரதிநிதி. வயநாட்டுக்கு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்தேன். சுதந்திரமான ஒரு நாட்டில் வாழ வேண்டும் என்பதே வயநாடு மக்கள் மற்றும் இந்திய மக்களின் நோக்கம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நான்கைந்து பேருக்கு மட்டுமே சொந்தமாக இருக்கக் கூடிய நாட்டில் யாரும் வாழ விரும்ப மாட்டார்கள். பாஜகவை எதிர்த்து கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் . வீட்டுக்கு போலீசாரை அனுப்புவதன் மூலம் என்னை பயமுறுத்தி விட முடியாது. எனது வீட்டை அபகரிப்பதன் மூலமாகவும் என்னுடைய நிம்மதியை குலைக்க முடியாது. வெள்ளம் வந்தபோது வயநாட்டில் நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. எனது வீட்டை பாஜக அரசு எடுத்துக் கொண்டாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். பாஜக மக்களை பிளவுபடுத்துகிறது, மக்களிடையே மோதலை உருவாக்குகிறது .

ஒவ்வொரு சிறிய சமூகத்தினரையும், மதத்தினரையும் நான் மதிப்பேன். தற்போது நடப்பது இருவித சமூக கண்ணோட்டங்களுக்கு இடையிலான மோதலாகும். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், வயநாடு மக்களுக்காக போராடிக் கொண்டே இருப்பேன். என் எம்.பி. பதவியை என்னிடம் பறித்தாலும், வயநாடு மக்களுடனான எனது உறவை பறிக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக பாடுபடுவேன் என்று ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்றம் சென்றிருந்தபோது ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர் குறித்து சில கேள்விகளை கேட்டேன். அதானி உடன் உங்களுக்கு உள்ள தொடர்பு என்ன என்று பிரதமர் மோடியிடம் கேட்டேன் . உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 609 இடத்தில் இருந்த கவுதம் அதானி 2-வது இடத்துக்கு வந்தது எப்படி என்று கேட்டேன். இந்திய விமான நிலையங்கள் தொடர்பான விதிகள் அதானிக்காக வளைக்கப்பட்டன. அதானிக்காக இந்திய வெளியுறவுக் கொள்கைகளும் வளைக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிய்வத்துள்ளார். நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் அரசே செயல்பட்டதை முதன்முறையாக பார்க்கிறேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பற்றி தவறான கருத்து கூறினால் அதை எதிர்த்து பேச உரிமை உண்டு என்று வயநாடு மக்களவை தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றியுள்ளார்.

The post விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக மக்கள் பிரதிநிதியானவர் குரல் கொடுக்க வேண்டும்: வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல்காந்தி உரை appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Wayanad ,Lok Sabha ,Wayanad Lok Sabha ,
× RELATED மகளிர் இடஒதுக்கீடு; ஓபிசி ஒதுக்கீடு...