×

திருவாரூர் பெருமை

நன்றி குங்குமம் ஆன்மீகம்

  1. இரண்டு இராஜாக்கள்

‌சைவ சமயத்தைப் பொருத்தமட்டில் இருண்டு ராஜாக்கள்தான். ஒருவர் நடராஜா. மற்றொருவர் தியாகராஜா திருவாரூரில் இருக்கும் இந்தத் தியாகராஜா தியாகங்களின் அரசராவர். இவர் அரசர் என்பதால் இவருக்கு அனைத்துச் சின்னங்களும் அரச சின்னங்களாகும்.

  1. சின்னங்கள்

மணித்தண்டு, தியாகக்கொடி, இரத்தின சிம்மாசனம், செங்கழுநீர் மாலை, வீரகண்டய வாள், அயிராவத யானை, பஞ்சமுகவாத்தியம், பாரிநாதஸ்ரம் (உலகில் இங்கு மட்டும்தான் உள்ளது) சுத்த மத்தளம், வேதக்குதிரை, பதினெண் பண்கள் என அரசகம்பீரத்துடன் திகழ்பவர் தியாகராஜர்.

  1. இறைவனின் திருப்பெயர்கள்

திருவாரூரில் வீதிவிடங்கராகக் கோயில் கொண்டுள்ள தியாகேசருக்கு அறுபதுக்கு மேற்பட்ட பெயர்கள் வழங்குகின்றன. வீதிவிடங்கர், தேவர்கண்ட பெருமான், தியாகப் பெருமான், ஆடரவக் கிண்கிணிக் காலழகர், செங்கழு நீரழகர், செவ்வந்தித் தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், அசைந்தாடும் அப்பர், இருந்தாடும் அழகர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன்தியாகர், தேவர் சிந்தாமணி, தியாக சிந்தாமணி போன்றவை அவற்றுள் பிரசித்தி பெற்ற திருப்பெயர்களாகும்.

  1. வீதிவிடங்கர்

நடராசரின் பாததரிசனம் பிரசித்தி பெற்றது. எடுத்த பாதத்தைக் கண்டால் வீடுபேறே வேண்டாம் என்று பாடுகிறார் நாவுக்கரசர். அதுபோல தியாகராஜரின் பாத தரிசனமும் மிக அரியது. அவரது திருமுகத்தை மட்டுமே காணமுடியும். மார்கழி திருவாதிரையன்றும் பங்குனி உத்தரத் தன்றும்தான் அவரின் திருப்பாத தரிசனம் கிடைக்கும்.இப்படி அரிய திருவடி கொண்ட பெருமான் நீதியை நிலைநாட்ட திருவாரூர்த் தெருக்களில் பாதம் தோய நடந்துள்ளார். மனுநீதிச் சோழர் வரலாற்றில் சிவபெருமானே பசுவாகவும் எமன் கன்றாகவும் வந்தனர் என்பதை,

“ஈசன் பசுவாகி எமனே கன்றாகி வீசுபுகழ் ஆரூரில் வீதி வத்தார் அம்மானாய்”

  • என்ற அடிகள் இறைவனின் அடி களைப்பற்றி அறிவிக்கின்றன.
  1. திருவிழாக்கள்

திருவாதிரை, மாசி உத்திரம், சுந்தரருக்கு பூதகணங்கள் நெல் அட்டிச் செல்லும் விழா, பங்குனி உத்திரம், ஆடிப்பூரம், தெப்பத் திருவிழா போன்றவை சிறந்த விழாக்களாகும்.
இங்கு நடக்கும் திருவாதிரைப் திரு விழாவில் நாவுக்கரசரே கலந்துகொண்டு அதை வியந்து ஒரு பதிகமே பாடியிருக்கிறார். மேலும், மாசி அஸ்தம் தொடங்கி பங்குனி உத்திரம் வரை நடக்கும் பெருந்திருவிழாவை நடைபெற வழிவகை செய்தவர் நமிநந்தியடிகள் எனும் நாயனார் ஆவார். இதை அப்பரடிகள்,

“பாரூர் பாரிப்ப அத்தம், பங்குனி
உத்திரம் பாற்படுத்தான்
ஆரூர் நறுமலர் நாதன் அடித்
தொண்டர் நமிநந்தி”

எனப் பாடியிருக்கிறார்.

இங்கு நடக்கும் பங்குனித் திருத்தேரைக் காண திருவொற்றியூரிலிருந்து சத்தியம் செய்து வந்தார் சுந்தரர். அதேபோல சேரமான் பெருமாள் நாயனாருடன் மலைநாடு சென்றபோது சுந்தரருக்கு ஆரூர் நினைவு வர, “ஆரூரனை மறக்கலுமாமே’ என்று ஒரு பதிகமே பாடினார் சுந்தரர். அதற்குக் காரணம், இங்குதான் சுந்தரருக்கு இறைவன் “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்து கொடுத்து அருள்செய்தார். அந்த நன்றிக்கடன்தான் சுந்தரருக்கு.

  1. ஊர்ச் சிறப்பு

`திரு’ என்றால் செல்வம் என்றும் சிவம் என்றும் பொருள். ஆர் என்றால் அழகு என்று பொருள். செல்வமும் சிவமும் அழகும் நிறைத்திருக்கும் ஊர் ஆதலால் இது திருவாரூர் எனப்பட்டது. இந்த ஊரில் மலர்தூவி வழிபட்டால் முக்தி எளிதில் கிடைக்கும் என்பதை திருஞானசம்பந்தர்

“சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி ஆகுமே”

  • என்று பாடுகிறார்.

நம் பெயருக்கு முன்னர் தனது ஊரின் பெயரைச் சேர்த்துக்கொள்வது இயல்புதான்; ஆனால் சுந்தரர் தனது பெயரையே ஆரூரன் என்று ஏற்றுள்ளார் எனில் திருவாரூரின் பெருமை எவ்வளவு பெரியது! ‘‘திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்றும் சுந்தரர் பாடியிருக்கிறார். இதுவரை இவரோ அல்லது மற்ற அடியார்களோ ‘‘ஒரு ஊரில் பிறந்தவர்களுக்கு நான் அடியேன்” என்று தனித்துப் பாடியது இல்லை. அவ்வளவு சிறப்பு மிக்கது திருவாரூர். இத்தலத்தில் கோயிலுக்கு இணையாகக் குளமும் அதற்கு இணையாக செங்கழுநீர் ஓடையும் சரியாக ஐந்து வேலி அளவு பரப்புடையதாகும்.

இதை,“குளம் வாவி மதில் வேலியாம் திருவாமூர்த் தியாகர்” என்கிறார் எல்லப்ப நாயனான நாவலர். மேலும் இந்தத் தலத்திற்குள் ஏறத்தாழ ஐம்பது ஆலயங்கள் காணப்படுகின்றன. உள்ளே சென்றால் கூப்பிய கரங்களை விரிப்பதற்கு வழியின்றித் திகைக்க வேண்டும் என்பதை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள், ‘‘குவித்த கரம் விரித்தல் செலாக் கோயில்கள் பலவுளவால்” என்று புகழ்கிறார்.

இவ்வூருக்கு ஆடக்கச்சுரம், கலிசெலா நகரம், சத்தியபுரம், சமற்காரபுரம், தேவயாகபுரம், தேவாசிரியம், முசுகுந்தபுரம், மூலாதாரபுரம், ஹநகரம், கந்தபுரம், தேவ சிரியபுரம் போன்ற பல பெயர்கள் உள்ளன.

  1. திருவாரூர் பிறந்தார் புராணம்

தெய்வச் சேக்கிழார் திருவாரூர் பிறந்தார் புராணத்தில் திருவாரூரில் பிறப்பவர்கள் அனைவரும் சிவபெருமானின் பூதகணங்களே ஆவர் என்பதை, “திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார் பெருக்கியசீர்த் திருவாரூர் பிறந்தர்கள்தருக்கிய ஐம்பொறியடக்கி மற்றவர்தம் தாள் வணங்கிதருத்திய நெஞ்சடையவர்க்கே அணித்தாகும் உயர்நெறியே” என்று கூறுமிடத்து திருவாரூரில் வாழ்பவர்கள் தம் ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்த்து சிவபதம் அடைவர் என்று கூறியிருக்கிறார்.

  1. இளமையிலேயே வழிபடுங்கள்
    ஐயடிகள் காடவர்கோன் பாடிய சேத்திர வெண்பாவில்
    “காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய்
    நாளும் அணுகி நலியாமுன் பாளை
    கவிழ்கமுகம்
    கூம்புகவென் கை”

என்ற பாடலில் இளமைக் காலத்திலேயே திருவாரூரில் இருக்கும் இறைவனை வழிபடுங்கள் என்று குறிப்பிடுகிறார்.

  1. தீர்த்தங்கள்

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூவகையாலும் சிறப்புப் பெற்றது திருவாரூர். திருவாரூர்த் திருக்கோயிலுக்கு முன்பாக இருக்கும் திருக் குளத்திற்கு ‘கமலாலயம்’ என்பது பெயர். குளமே ஆலயம் என்று போற்றப்படுவது இங்குமட்டும்தான். இக்குளத்தில் 27 தீர்த்தக் கட்டங்கள் இருக்கின்றன.

இந்தத் திருக்குளத்தைத் தூர்வாரி திருப்பணிசெய்து அதன்வழி முக்திபெற்றவர் தண்டியடிகள் என்ற நாயனார். பிறவிக் குருடராக இருப்பினும் அகக்கண் கொண்டு இக்குளத்தைத் திருப்பணி செய்தார். இக்குளத்தின் நடுவே நாகநாதசுவாமி திருக்கோயில் எழிலுற விளங்குகிறது.மேலும், சுந்தரர் சிவபெருமானிடம் பெற்ற பொற்காசுகளை மணிமுத்தாற்றில் போட்டு, இந்தக் குளத்தில்தான் மீண்டும் எடுத்துக்கொண்டார். கமலாலயக் குளத்தில் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறும். அதில் இறைவன் பார்வதியுடன் கலியாண சுந்தரராக எழுந்தருள்கிறார். 30 அடி உயரமும் 50அடி அகல நீளமும் உடைய இத்தெப்பத்தில் 800 பேர் அமர முடியும்.

இத்தீர்த்தத்தைத் தவிர, தேவாசிரிய மண்டபம் அருகில் சங்கு தீர்த்தமும், மேற்குப் பிரகாரத்தில் வானி தீர்த்தமும் ஊரின் தெற்கில் ஓடமாக கபிலதீர்த்தமும், கிழக்கில் செங்கழுநீர் ஓடையாக ஒரு தீர்த்தமும் என பல தீர்த்தங்கள் சிறப்பாகத் திகழ்கின்றன திருவாரூரில்.

  1. வழிபட்டோர்

ராமபிரான், அரிச்சந்திரன், திருமால், தசரதன், இந்திரன், பிரம்மன், அகத்தியர், திரிசங்கு, துருவாசர், நளன், மனுநீதிச் சோழன், முசுகுந்தச் சக்கரவர்த்தி, விஸ்வாமித்ரர், கோகர்ண முனிவர், திருமகள், மன்மதன், மேனகை உள்ளிட்டோர் திருவாரூர் தியாகரை வழிபட்டிருக்கின்றனர்.

  1. இலக்கியங்கள்

கச்சியப்பர் கந்தபுராணத்தின் கந்தவிரதப் படலத்தில் 127 பாடல்களில் திருவாரூர்ப் பெருமையைப் பாடியிருக்கிறார். சேரமான் பெருமாள் நாயனார் திருவாரூர் மும்மணிக்கோவை பாடியிருக்கிறார். சேக்கிழார் பெரியபுராணத்தில் திருநகரச் சிறப்பில் திருவாரூரைப் புகழ்கிறார். அளகை சம்பந்த முனிவர் திருவாரூர்ப் புராணம் பாடியிருக்கிறார்.

சிதம்பரம் மறைஞான சம்பந்தர் (ஆதி கமலாலய மகாத்மியம், குமரகுருபரர் திருவாரூர் நான்மணிமாலையும், வைத்திய நாத தேசிகர் திருவாரூர் பன்மணிமாலையும் சைவ எல்லப்ப நாவலர் திருவாரூர்க் கோவையும், சீகாழி அருணாசலக் கவிராயர் தியாகேசர் வண்ணமும் சதாசிவ தேசிகர் திருவாரூர் இரட்டைமணி மாலையும், பாபநாச முதலியார் திருவாரூர் குறவஞ்சியும், மகாவித்வான் ‘தியாகராஜ லீலை’யையும் பாடியிருக்கின்றனர்.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

The post திருவாரூர் பெருமை appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Nataraja ,Thiagaraja Thiruvarur ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி...