×

23வருட வீட்டு சாப்பாட்டுக்கடை

வளசை பாய் மெஸ்

கடைக்கு போர்டுகூட இருக்காது. விளம்பரம் கிடையாது. வாய் வழியாக மக்களிடம் பரவும் செய்திதான் உணவகத்தை நோக்கி மக்களை வரத் தூண்டும். சென்னை வளசரவாக்கம் புவனேஸ்வரி நகரில் அமைந்துள்ள ‘வளசை பாய் மெஸ் 23 வருடமாக வீட்டு சமையல் முறையில் விருந்து படைத்து வருகின்றார்கள். அந்த பகுதியில் உள்ள எல்லா தரப்பினரும் வந்து சாப்பிட்டுச் செல்கின்றார்கள். சிறிய இடம்தான். சுற்றி இருக்கும் அரசு அலுவலகங்களுக்கு இங்கிருந்துதான் உணவு செல்கிறது. 30 வருடங்களாக நகராட்சி ஆபீசில் பணியாற்றும் பெரும்பாலானவர்கள் இங்குதான் சாப்பிடுகின்றனர். அபுபக்கர், ஜெஸிமா தம்பதிகள் மிகுந்த அக்கரையுடன் நடத்தி வருகின்றார்கள்.வளசையை சுற்றி உள்ள அரசு அலுவலகம், சினிமா உதவி இயக்குநர்கள், காவல்துறை, வங்கி ஊழியர்கள்… என பல துறைகளில் வேலை செய்பவர்கள் ரெகுலர் கஸ்டமர்களாக இருக்கிறார்கள்.

1999ம் வருடத்தில் இருந்து தொடர்ந்து சாப்பிட வரும் ஏரியாவாசிகள் ஏராளம். மதிய நேரத்தில் 10க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் மெஸ் வாசலில் நிற்கின்றன. ‘‘பூர்வீகம் அறந்தாங்கி பக்கத்துல அம்மா பட்டினம். அப்பா ஷேக் அப்துல்லா மளிகை வியாபாரம் செய்தார். அப்பா இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில 15 வருடங்களுக்கு மளிகைக் கடை நடத்திவந்தார். அங்க கிடைத்த பணத்தை வச்சு சொந்த ஊர்ல ஒரு மளிகை கடைய தொடங்கினோம். தேவையான மளிகைப் பொருட்களை நானே பேக் செய்து ஹோட்டல்களுக்கு கொண்டு போய் கொடுப்பேன். அப்படி தான் ஹோட்டல்கள், சமையல் சார்ந்து அறிமுகம் ஆச்சு. மளிகைச்சாமான் பொருட்களை இறக்கி வைத்துவிட்டு அங்கு சமைக்கும் விதத்தை கூர்ந்து கவனிப்பேன். சமையல் மீது தனி மரியாதையே வந்தது.

அவர்களிடம் சில டிஸ்களை எப்படி சமைப்பது என்பது பற்றி அதன் பக்குவத்தை கேட்டு தெரிந்துகொண்டேன். இந்நிலையில் நண்பர் ஒருவரின் துணையோடு மலேசியாவிற்கு சென்றேன். உணவகத்தில் 12 வருடங்களுக்கு மேலாக வேலை செய்தேன். அங்கு கிடத்த வருமானத்தை வைத்து நம்மூரில் சொந்தமாக உணவகத்தை துவங்கலாம் என முடிவு எடுத்தேன். சென்னையில் தொடங்க வேண்டும் என்ற நோக்குடன் நானும் மனைவி ஜெசிமாவும் 25 வருடங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கத்திற்கு வந்தோம். அப்போ இந்த ஊர் வளர்ந்து வர்ர கிராமம். சைதாப்பேட்டை மவுண்ட் ரோடு தான் எங்களுக்கு டவுனு.முதலில் சிறிய வண்டியில் தான் மெஸ்ஸை தொடங்கினோம். வளசரவாக்கத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நடந்து சென்றே உணவினை டெலிவரி செய்தேன்.

மெஸ்ஸில் அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களும் வந்து உணவினை பார்சல் வாங்கி செல்வார்கள். அதற்கு காரணம் வீட்டிலேயே தயார் செய்த உணவு என்பதால்தான். இதில் வந்த வருமானத்தைக் கொண்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மெஸ்ஸை நடத்த தொடங்கினேன். இந்த வீட்டிலேயேதான் நாங்களும் வாழ்ந்து வருகிறோம். குடும்பமாகவே மெஸ்ஸை நடத்தியும் வருகிறோம்.” என்கிறார் அபுபக்கர். பொதுவாகவே அசைவம் சமைப்பதில் ஒரு பக்குவம் தேவை. கலப்படம் நிறைந்த பொருட்களை தவிர்த்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மிளகாய், மட்டன் மசாலா சிக்கன் மசாலாவை தவிர்த்து காயவைத்து சேர்மானங்கள் சேர்த்து வீட்டில் அரைத்த பொருட்களை வைத்து அசைவம் சமைத்தால் அது தனித்த ருசியை நிச்சயம் தரும். குறைவான மெனு தான்.

கோழிக் குழம்பு, மட்டன் குழம்பு, வடித்த சாதம், ரசம் கூடவே பூண்டு, மிளகாய் சேர்த்த ஸ்பெஷல் சிக்கன் 65 தனித்த ருசியில் அள்ளுகின்றது. பத்துக்குப் பத்து அறையில் கூலிங் ஆஸ்பெட்டாஸ் சீட் இறக்கி, அதனுள்ளே நாற்காலி போட்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சட்டிகளில் மட்டன் சிக்கன் கறிக்குழம்பு கொதித்துக் கொண்டிருக்கிறது. பகல் 11 மணிக்கெல்லாம் இருக்கைகள் நிறைந்துவிடுகின்றன.தொடர்ந்து பேசியவர் ‘‘மெஸ் தொடங்கியதில் இருந்து இப்ப வரைக்கும் வடித்த சோறு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, சிக்கன் லெக் பீஸ், சிக்கன் 65 உடன் ரசம் சேர்த்துதான் கொடுக்கிறோம். அதேபோல் குழம்பு செய்ய தேவையான மசாலாக்களை வீட்டிலேயே தயார் செய்கிறோம். பட்டை, கிராம்பு, கொத்தமல்லி, மிளகாய் தேவையான மசாலா பொருட்களை காலையும், மாலையும் மிதமான வெயிலில் காய வைக்கிறோம். அதை வாணலியில் கொட்டி மிதமான சூட்டில் வறுத்து அதோடு தேங்காய் சேர்த்து அரைத்து குழம்பை தயார் செய்கிறோம். இப்போது 200 கிராம் சிக்கனுடன் சேர்த்து அன்லிமிடெட் சாப்பாடு 130 ரூபாய்க்கும், 100 கிராம் ஆட்டுக்கறியுடன் அன்லிமிடெட் சாப்பாடு 180 ரூபாய்க்கும் தருகின்றோம். இரவில் கறிக் குழம்புடன் சேர்த்து, இட்லி, தோசை, பூரியும் கொடுக்கிறோம்.

  • சுரேந்திரன் ராமமூர்த்தி
    படங்கள்: கணேஷ்குமார்

The post 23வருட வீட்டு சாப்பாட்டுக்கடை appeared first on Dinakaran.

Tags : Household Dish Store ,
× RELATED “வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்”.....