×

சட்டப் பேரவையில் வினா –விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு விடையளித்தார்.!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (11.04.2023) வினா – விடை நேரத்தின்போது, நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமதி.எஸ்.தேன்மொழி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.பி.உதயகுமார், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.தாயகம்கவி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.கே.அமுல் கந்தசாமி ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் விடையளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் திருமதி.எஸ்.தேன்மொழி அவர்கள் : நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிலக்கோட்டை அருள்மிகு அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த அரசு முன்வருமா? ஆம் எனில் எப்போது?

அமைச்சர் அவர்கள் : அருள்மிகு அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோயில் என்பது கனகவள்ளி தாயாரோடு வீற்றிருக்கின்ற ஒரு சக்தி வாய்ந்த திருத்தலமாகும். அதற்கு ஏற்கனவே 06.07.2003 அன்று குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது. கடந்தாண்டு சட்டமன்ற அறிவிப்பில் இந்த திருக்கோயில் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தோம். அதற்கேற்ப தற்போது தொல்லியல் வல்லுநர் குழு, மண்டல மற்றும் மாநில வல்லுநர் குழுக்களின் அனுமதி பெறப்பட்டு மதிப்பீடுகள் தயார் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் 2 வாரங்களில் ஒப்பந்தம் கோரப்பட்டு 3 மாதங்களில் திருப்பணி தொடங்கப்படும். இந்த வினாவை எழுப்பிய உறுப்பினர் அவர்களுக்கு உடல் நலம் சரி இல்லை என கேள்விப்பட்டோம். அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்ற பிரார்த்திக்கிறோம்.

சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் : அமைச்சர் அவர்கள் ஆரம்பகட்ட பணிகள் எல்லாம் தொடங்கி இருப்பதாக சொன்னார்கள். அகோபில நரசிங்க பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு பணிகளை விரைவாக தொடங்கிட வேண்டும் என்பதே உறுப்பினர் திருமதி தேன்மொழி சேகர் அவர்களின் கோரிக்கையாகும். மூல கேள்விக்கு தொடர்பில்லை என்றாலும் கூட அமைச்சர் அவர்கள் புள்ளி விவரங்களை தெளிவாக வைத்திருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை பெருவிழா இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறும் என அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. தேர் திருவிழா, திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்குகின்ற வைபவம் சிறப்பானதாகும். கடந்த எடப்பாடியார் ஆட்சியில் தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த காலங்களைப் போல இந்த ஆண்டும் கள்ளழகர் ஆற்றல் இறங்குவதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், தண்ணீர் திறந்து விடுவதற்கும் அமைச்சர் அவர்கள் முன் வருவாரா என கேட்டு அமைகிறேன்.

அமைச்சர் அவர்கள் : உறுப்பினர் அவர்கள் வீரவசந்தராயர் மண்டபத்தை பற்றி கேட்பார் என்று நினைத்திருந்தேன். கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பணிகளை தமிழக முதல்வர் அவர்கள் கடந்த மாதம் தூண்களை நிர்மாணம் செய்து தொடங்கி வைத்து விட்டதால் அந்த கேள்வியை உறுப்பினர் அவர்கள் தவிர்த்து விட்டதாக நினைக்கிறேன். இருந்தாலும் உறுப்பினர் அவர்கள் கோரியபடி கள்ளழகர் ஆற்றில் மிக மகிழ்ச்சியோடு இறங்குவார், தேவையான அளவு தண்ணீரும் நிரப்பப்படும். கடந்த முறை ஆற்றில் இறங்குகின்ற வைபவங்கள் எல்லாம் முடிந்த பிறகு திரும்ப செல்லும்போது கூட்ட நெருக்கடியில் விபத்து ஏற்பட்டது. அது போன்ற எந்த விபத்தும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று முன்கூட்டியே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களை எச்சரித்து இருக்கின்றார். ஆகவே இந்த முறை கள்ளழகர் மகிழ்ச்சியோடு ஆற்றில் இறங்குவார், வைபவமும் மகிழ்ச்சியோடு நடைபெறும்.

சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.தாயகம்கவி அவர்கள் : தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் எத்தனை திருக்கோயிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது என்பதையும், நாள்தோறும் எத்தனை நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்பதையும், என்னுடைய திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 74-ல் அமைந்துள்ள மிகப் பழமையான திருக்கோயிலான சேமத்தம்மன் திருக்கோயிலில் அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்படுமா என அறிய விரும்புகிறேன்

அமைச்சர் அவர்கள் : உறுப்பினர் அவர்கள் கோரிய அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயில் நான் வசிக்கின்ற பகுதியின் அருகாமையில் இருக்கின்ற திருக்கோயிலாகும். அத்திருக்கோயிலுக்கு ஆண்டிற்கு ரூ.30 ஆயிரம் அளவிற்கு தான் வருமானம் இருக்கின்றது. இத்திருக்கோயில் அருள்மிகு கங்காதேஸ்வரர் திருக்கோயிலின் உபகோயிலாகும். ஆகவே கங்காதீஸ்வரர் திருக்கோயிலில் இருக்கின்ற உபரிநிதியை பயன்படுத்தி சேமாத்தம்மன் திருக்கோயிலில் அன்னதான திட்டம் ஏற்படுத்துவதற்கு சாத்திய கூறுகள் இருந்தால் நிச்சயமாக பரிசீலிக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு வருவதற்கு முன்பு 754 திருக்கோயில்களில் செயல்பட்டு கொண்டிருந்த அன்னதானத் திட்டத்தை கூடுதலாக 10 திருக்கோயில்களில் செயல்படுத்த உத்தரவிட்டு 764 திருக்கோயிலில் இன்றைக்கு அன்னதானத் திட்டம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. நாள் முழுவதும் அன்னதான திட்டம் என்பது கடந்த காலங்களில் பழனி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய 2 திருக்கோயில்களில் மட்டும் இருந்தது.

தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு கூடுதலாக 6 திருக்கோயில்களுக்கு நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தை விரிவுப்படுத்தி 8 திருக்கோயில்களில் தற்போது நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதுபோல், பழனி திருக்கோயில் சார்பில் செயல்படுகின்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் 4,000 நபர்களுக்கு தினந்தோறும் காலை சிற்றுண்டியை இந்து சமய அறநிலையத்துறை வழங்கி வருகிறது. அன்னதானத் திட்டத்தின் முலம் நாளொன்றுக்கு சுமார் 82 ஆயிரம் பக்தர்கள் பயனடைகின்றார்கள். மேலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் பழனியில் அன்னதானம், நெல்லையப்பர் திருக்கோயிலில் விசேச காலங்களில் 31 நாட்களில் 31,000 பேர்களுக்கு அன்னதானம் என்று ரூ.105 கோடியை அன்னதானத் திட்டத்திற்கு மட்டும் செலவு செய்கின்ற அரசு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.கே.அமுல் கந்தசாமி அவர்கள் : நேற்றைய தினம் எனது வால்பாறை தொகுதிக்குட்பட்ட மாசாணியம்மன் திருக்கோயில் திருப்பணிகளுக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக அமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்கள். அந்த நிதி உபயதாரர் நிதியா அல்லது அரசு நிதியா என்பதை தங்களின் வாயிலாக அறிய விரும்புகின்றேன்.

அமைச்சர் அவர்கள் : அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் திருப்பணிக்களுக்கான நிதி ரூ. 7 கோடியானது உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் நிதியிலிருந்தும் செலவிடப்படுகிறது. அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான அவர் கூடுதலாக உபயதாரர்களிடமிருந்து நிதியை பெற்று தந்தால் இந்து சமய அறநிலையத்துறையின் பணம் மிச்சப்படுத்தப்பட்டு வேறு வருமானம் இல்லாத திருக்கோயில்களுக்கு பயன்படுத்துகின்ற ஒரு நல்ல சூழ்நிலை உருவாகும். அத்தகைய சூழ்நிலையை உறுப்பினர் அவர்கள் உருவாக்கித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

The post சட்டப் பேரவையில் வினா – விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு விடையளித்தார்.! appeared first on Dinakaran.

Tags : Minister ,PK Shekharbabu ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Nilakottai Assembly ,S. Thenmozhi ,Thiruparangunram ,Assembly ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி