×

சனிப் பெயர்ச்சி என்ன செய்யும்? நாம் என்ன செய்ய வேண்டும்?

29.03.2023 அன்று சனிப் பெயர்ச்சி. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி ராசி மாறுவார். அந்த அடிப்படையில் வாக்கிய பஞ்சாங்கப்படி 29.03.2023 சனிப் பெயர்ச்சி நடந்து இருக்கிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் தேதி அதாவது தை மாதம் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மகர ராசியில் இருந்து தனது சொந்த வீடான கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்து விட்டார். ஆனால், கோயில்களில் வாக்கியப் பஞ்சாங்க முறைதான் கடைப் பிடிக்கப்படுகிறது.

ஒரு வாடகை வீட்டைப் பார்த்துவிட்டு, “சரி, பிறகு நல்ல நாளாகப் பார்த்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் செல்வது போல, விரைவாக கும்பத்தில் நுழைந்திருக்கிறார். எது எப்படி இருந்தாலும், மூன்று மாதத்திற்குள் பெரிய வித்தியாசங்கள் வந்து விடப் போவதில்லை. ஆனால் சனி பெயர்ச்சி குறித்து எல்லோரும் கவலைப்படுகிறார்கள். அச்சப்படுகிறார்கள். பரிகாரங்களைத் தேடி ஓடுகின்றார்கள். சனியை ஒரு கொடுமைக்காரராகவே சித்தரிக்கிறார்கள். ஆனால் எந்த கிரகமும் கெட்ட கிரகம் அல்ல.

கிரகங்கள் என்பது நம் மன இயல்பின் குறியீடு. நம் செயல்களின் விளைவு என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. ‘‘எட்டில் சனி இருந்தால் இல்லாத கஷ்டமெல்லாம் சேரும்”.உண்மைதான்.100 ஜாதகங்களில் 80 ஜாதகங்கள் அப்படித்தான் இருக்கிறது.ஆனால் “நமக்கு ஏன் எட்டில் சனி நிற்கிறார்?” என்பதைக் குறித்து யாரும் சிந்திப்பதில்லை. சனி பகவான் யார்? இங்கே வானியல் சாஸ்திரமெல்லாம் பயன்படாது. அது சூரியனிலிருந்து மிக தூரத்தில் உள்ள கிரகம் என்பதால், அதில் சூரிய ஒளி அதிகம் படுவது கிடையாது. எனவே சனி ஒரு இருள் கிரகம். அது மட்டுமல்ல.

சனி சூரியனைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலமும் அதிகம். எனவே மெல்ல நகரும் கிரகம் என்ற பெயரும் அதற்கு உண்டு. சநைச்சர என்றால் மெல்ல நகர்தல் என்று தான் பொருள். இந்த இரண்டையும் குணங்களாக மாற்றினால், தெளிவற்ற சிந்தனை கொண்டவரையும், எந்தக் காரியத்தையும் மிகத் தாமதமாக, அலட்சியத் தோடு, மிக மெதுவாகச் செய்பவரையும், சனியின் ஆதிக்கத்தில் உள்ளவர் என்று கொள்ளலாம். அந்த அளவுக்கு காரகங்களை எடுப்பதற்கு, சில விஷயங்களை நாம் வானியலில் இருந்து எடுத்துக் கொள்ளலாமே தவிர, முழுமையாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.

புராணத்தில் சனி பகவான் யார்?

சனீஸ்வர பகவான், சூரிய பகவானின் குமாரர். இவருடைய மாதா, சாயா தேவியார் சாயாதேவிக்கு நிஷுபா, பிருத்வீ என்னும் பல பெயர்கள் உண்டு. சூரியதேவன் த்வஷ்டா என்பவரின் குமாரத்தியான சுவர்ச்சலாத் தேவியைத் திருமணம் செய்துகொண்டார். சுவர்ச்சலா தேவிக்கு ஸமுக்ஞா, ஸரேணு, ராக்ஞீ, பிரபாஸா என்றும் பல பெயர்கள் உண்டு. சூரியதேவனுக்கும், சுவர்ச்சலா தேவிக்கும் சிராத்த தேவன் என்று அழைக்கப்படும் வைவசுதமனு, யமதர்ம ராஜன் என்று இரு புதல்வர்களும், யமுனை என்னும் பெயருடைய பெண் பிள்ளையும் பிறந்தனர். யமனும், யமுனையும் இரட்டைப் பிறவிகள். சுவர்ச்சலா தேவிக்கு நாளாக நாளாகச் சூரிய தேவனின் உக்கிரமான கிரணங்களைத் தாங்கும் சக்தி குறைந்து கொண்டே வந்தது.

சுவர்ச்சலாதேவி தனது மனோசக்தியால் தனது நிழலையே, தன்னைப் போன்ற பேரெழில் கொண்ட பெண்ணாகத் தோன்றச் செய்தாள். ‘‘எனது சாயையில் இருப்பதால் உனக்கு சாயாதேவி என்று நாம கரணம் சூட்டுகிறேன். உனக்கு நான் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறேன். நான் தவம் செய்யப் போகிறேன். நான் திரும்பி வரும் வரை நீ என் கணவருடன் வாழ்வாயாக!’’ என்று கூறினாள். சுவர்ச்சலாவின் அன்பு கட்டளைப்படி சாயாதேவி, சூரியதேவனுடன் வாழத் தொடங்கினாள்.

சூரிய தேவனுக்கும், சாயா தேவிக்கும் தபதீ என்னும் புத்திரியும், ச்ருதச்ரவஸீ, ச்ருதகர்மா என்று இரு புதல்வர்களும் பிறந்தனர். ச்ருதகர்மா தான் பின்னால் சனீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். ஒரு நாள் உண்மை தெரிந்தது.ஆயினும் சூரிய பகவான் அசல் மனைவியான சுவர்ச்சலாதேவியைக் கண்டுபிடித்து அழைத்து வந்தான். சாயா தேவியையும் விட்டுவிடவில்லை. சாயா தேவியையும் ஏற்றுக் கொண்டு இரு தேவியர் சமேதராக பத்மாசனத்தில் எழுந்தருளி பாரெல்லாம் பவனி வந்தார். சுவர்ச்சலா தேவிக்கு, இருபுத்திரர்கள் பிறந்தனர்.

அவர்கள் அஸ்வினி தேவர்கள் என்று திருநாமம் பெற்றனர். இவர்கள் தேவலோக வைத்தியர்களாக விளங்கினர். ரைவதன் என்று மற் றொரு மகனும் பிறந்தான். ச்ருதகர்மாவான சனீஸ்வரருக்கு, இளமை முதற்கொண்டே விழிகளிலே ஓர் அபாரசக்தி இருந்தது.! அவர் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து கடுமையான தவம் இருந்தார். சனியின் தவத்தை மெச்சி பரமன் காட்சி கொடுத்தார். கிரக அந்தஸ்து கொடுத்தார்.

“நவக்கிரகங்களில் ஸ்திர நிலையும் உனக்குத்தான். நீ பூஜித்த லிங்கம் சனீஸ்வரலிங்கம் என்று அழைக்கப்படும்” என்றார். ஏழு நாட்களில் சனிக்கிழமையை ஸ்திரவாரம் என்று அவருக்கு அளித்தார். காலபுருஷனின் 12 ராசிகளின் பத்தாம் ராசியான மகர ராசியும், 11ஆம் ராசியான கும்ப ராசியும் அவருக்கு வீடுகளாக அளிக்கப்பட்டன. 10 என்பது கர்மாவைக் குறிப்பது. 11 என்பது அதனுடைய விளைவுகளைக் குறிப்பது.

எந்தக் கர்மாவை செய்கிறோமோ, அதற்கு ஏற்ற விளைவுதான் வரும் என்பதைச் சொல்லாமல் சொல்லுவது தான் இந்த ஜோதிட நூல்களின் சூட்சுமம். நாம் தீமையான பலன்களை அறுவடை செய்கிறோம் என்று சொன்னால், அதற்கு முன்னால் நாம் தீமையான செயல்களைச் செய்திருக்கிறோம் என்றுதான் பொருள். எனவே, பலனை சனிபகவான் நிர்ணயிக்கவில்லை, நாம்தான் நிர்ணயித்துக் கொள்கிறோம் என்கிற புரிதல் இல்லாமல் ஜோதிட சாஸ்திரத்தைப் பார்ப்பதால் ஒரு பலனும் கிடையாது.

அண்டத்தில் நவகிரகங்கள் இருப்பது போலவே அண்டத்தின் பிண்டங்களான நம் ஒவ்வொருவரும் நவகிரக ஆதிக்கத்திலிருக்கிறோம். சனி என்பது நாம்தான் என்பதை யாரும் உணர்வது கிடையாது. சனி குறித்து அஞ்சுவது நம்மைக் குறித்து நாமே அஞ்சுவது. சனியைத் திட்டுவது நம்மை நாமே திட்டிக்கொள்வது.

நம்மை நாமே திட்டிக் கொள்வதால் என்ன பலன்?

செய்த தவறுகளின் விளைவுகள் தான் சனி பகவானாக ஜாதகத்தில் நிற்கின்றன. காரணம் சனி பகவான் நிலை சிலருக்கு மிகப்பெரிய வாழ்க்கையும் தருகின்றது. சனி திசையிலும், ஏழரைச் சனி நடக்கும் போதும், சிலர் கோடீஸ்வரர்களாக ஆன கதை உண்டு.

சனி கொடுத்தால் எவர் தடுப்பார்?

அவர் கொடுத்தாலும் மற்ற கிரகங்களால் தடுக்கமுடியாது. கெடுத்தாலும் தடுக்க முடியாது. ஆனால், சனி கொடுமையானவர் என்று சொன்னால், அவர் ஏன் கொடுமைக்காரர் என்று சிந்திப்பதில்லை. ஏன் கெடுதல் செய்கிறார் என்பதைப் பற்றி நாம் யாரும் யோசிப்பது இல்லை. நாம் செய்த தவறுக்கு தயவு தாட்சண்யம் இல்லாமல் அவர் கண்டிப்பாக இருப்பார் என்பதுதான் உண்மை. அந்த தண்டனையின் அடர்த்தி (intensity of punishment) என்பது நாம் செய்த வினையைப் பொறுத்திருக்கிறது. அல்லது அந்த வினைக்கு நாம் செய்த பரிகாரத்தைப் பொறுத்திருக்கிறது.

பரிகாரம் என்றால் கோயில் வழிபாடு மட்டும் அல்ல.அங்கே தான் நாம் ஏமாந்து விடுகிறோம். நாம் என்ன செய்தோம் என்பதைச் சிந்தித்து தவறுகளை திருத்திக் கொண்டு, நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்து, அவர்கள் அன்பைப் பெறுவதும் நம்பிக்கையை பெறுவதும் தான் பரிகாரம்.
தப்பு செய்திருப்போம் அதுதான் என்று உணர்ந்து வருந்த வேண்டும். கல்யாணத் தடை என்றால் கல்யாணத்திற்கு சிரமப்படும் யாருக்காவது உதவ வேண்டும். நம் கஷ்டத்தையே நினைத்திருக்கக் கூடாது.

அப்பொழுதுதான் இந்த நிழல் கிரகத்திலிருந்து தப்பிக்க முடியும். மற்றபடி தோராயமான ராசிப்பலனைப் பார்த்து அச்சப்பட வேண்டாம். 12 ராசிகளில் சனி ஒரு சுற்று சுற்றிவர முப்பது ஆண்டுகளாகும். இதில் மூன்றாம் இடம், ஆறாம் இடம், 11-ம் இடம் என்ற மூன்று இடங்களைத் தவிர, வேறு எந்த இடமும் சனி பகவானுக்கு நன்மை தரும் இடமாகச் சொல்லப்படவில்லை.

இந்த மூன்று இடங்களில் கூட மேஷ ராசிக்கு 11ஆம் இடத்தில் வரும் சனி முழுமையாக நன்மை செய்வார் என்று சொல்ல முடியாது. காரணம் மேஷ ராசி ஒரு சர ராசி. சர ராசிக்கு 11-ம் இடம் என்பது பாதகஸ்தானம் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அந்தக் கணக்கின்படி சனி பதினொன்றாம் இடத்தில் இருந்தாலும் பாதகம் செய்வார். அவர் முழுமையான நன்மையைச் செய்ய முடியாது.

இரண்டு ராசிகளுக்கும் மட்டுமே நன்மையைச் செய்யும். ஒன்று கன்னி ராசி. இன்னொன்று தனுசு ராசி. இந்த தனுசு ராசிக்கு நன்மை நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காரணம் என்ன என்று சொன்னால் இவர்கள் ஏழரைச் சனியிலிருந்து விடுபடுகிறார்கள். நோயிலிருந்து விடுபட்டால் ஒரு மகிழ்ச்சிதானே. அது ஒரு உளவியல். எது எப்படி இருந்தாலும் கூட சனியினுடைய தீமைகளை மற்ற கிரகங்களின் துணை கொண்டுதான் மதிப்பிட வேண்டும். அதோடு அவரவர் ஜாதகத்தில் சனி யோகக்காரரா அல்லது தீமையைக் கொடுக்கக்கூடியவரா என்பதையும் யோசிக்க வேண்டும்.

நடக்கக்கூடிய தசாபுக்தியையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். தனுசு ராசிக்கு அஷ்டமாதிபதி தசை நடந்தால் சனி என்ன செய்வார்? தசையின் வீரியத்தை கோசாரத்தால் ஒரு அளவுக்கு மேல் குறைக்க முடியாது. இப்போது நீங்கள் யோசித்துப் பாருங்கள். தனுசு ராசி, கன்னி ராசி தவிர மீதி இருக்கக்கூடிய 10 ராசிகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் சனி பொல்லாதவராக இருக்கிறார்.

இந்த 10 ராசியில் மொத்த ஜனத்தொகையில் 85 சதவீதம் பேர் இருப்பார்கள் என்று சொன்னால் அவ்வளவு பேருக்கும் தீமையான பலன்களை எதிர்பார்க்க முடியுமா என்பதை சிந்தித்தால், நமக்கு இதற்கான விடை தெரியும், ஆனால் இதிலும் ஒரு உண்மை உண்டு. வாழ்க்கை என்பது பெரும்பாலும் 80% சாதாரணமாகத்தான் போகும். சாதாரண வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான சம்பவங்களோ துன்பகரமான சம்பவங்களோ அடிக்கடி நடப்பது இல்லை.


மனிதப் பிறவி என்றாலே பொதுவாக சிரமத்திற்கு ஆட்படுவதுதான். அந்த சிரமம், தொடர் சிரமமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவ்வப்பொழுது மகிழ்ச்சிகள் இருக்கின்றன.

ஒருவேளை உணவு சாப்பிட்டால் அடுத்து ஐந்து ஆறு மணி நேரம் நாம் தாக்கு பிடித்து இருப்பது போல, ஏதேனும் ஒரு நல்ல பலனை தந்து விட்டால், அதற்குப் பிறகு அதன் மற்ற விஷயங்களை எதிர்கொள்வதற்கு தயாராகி விடுவோம் என்பது தான் கிரகங்களின் சூட்சுமம். இது சனி பெயர்ச்சிக்கும் பொருந்தும். பிறகு ஏன் இத்தனை பயம்? இந்த பயம் தேவையற்றது. பொதுவாக சனி ஒரு குறியீடு.

  1. நம் மனதில் உள்ள இருள்.
  2. மெத்தனம்.
  3. விழிப்புணர்வு இன்மை.
  4. தவறான நபர்களோடு பழக்கம் அல்லது தவறாகப் புரிந்து கொள்ளுதல்.
  5. தூய்மை இல்லை.

இவை சனிப் பகவான் பிரதிபலிக்கும் குற்றங்கள். இந்தக் குற்றங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது இயல்பாக இருந்தாலே சனி ஆதிக்கத்தில் இருக்கிறார்கள் என்றுதான் பொருள். அது ஏழரை மற்றும் அஷ்டமச் சனியின் போது கொஞ்சம் அதிகரிக்கவே செய்யும். இந்தப் பழக்கங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இருளில் நாம் நடக்கும்போது நிறைய குற்றங்கள் நடக்கும். நாம் விழுவோம் அல்லது எதனோடாவது மோதிக் கொள்வோம். சிந்தனைகள் இந்த நேரத்தில் எதிர்மறையாக இருக்கும். தெளிவு இருக்காது. நல்லவற்றை தவறாகவும் தவறானவற்றை நன்மையாகவும் கருதுகின்ற ஒரு மனநிலை வரும்.

அதற்கு ஏற்றாற்போல நம்மைக் குழப்புவதற்கான சில நண்பர்கள் அல்லது உறவுகள் வருவார்கள். நம்மை சிந்திக்க விடாத இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும். குழப்பமான மனநிலையை ஏற்படுத்தி, கடன்களை அதிகப்படுத்தும். மனைவி முதலிய உறவுகளில் கற்பனை சந்தேகங்கள் வரச்செய்து பிரிக்கப்பார்க்கும். காரணம் இருள் அல்லவா. இதை கருத்தில் கொண்டு, நாம் நிதானமாக பிரச்னைகளை அணுக வேண்டும். பிரச்னையை இருட்டில் அணுகாமல் ஒரு வெளிச்சத்தைப் பாவிக்க வேண்டும். அப்படி இருந்தால் பிரச்னைகளை கடந்துவிடலாம் அல்லவா.

அவசரப்பட்டால் எதுவும் நடக்காது. சனி திசையில் இருப்பவர்கள் அல்லது ஏழரை சனியில் அஷ்டம சனியில் இருப்பவர்கள் நிதானமும் பொறுமையும் கொள்ள வேண்டும். அதே சமயம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டால் நஷ்டம். பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதற்கும், சோம்பலாக அலட்சியமாக இருப்பதற்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதல்தான் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுதல். சனியில் சில எதிர்மறை விஷயங்களை எப்படி எதிர் கொள்வதுஎன்பது முக்கியமான விஷயம்.

  1. சரியான பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
  2. பொறுமையாக இருக்க வேண்டும். அவசரம் கூடாது.
  3. எதையும் விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு வரக்கூடாது.
  4. நல்ல நண்பர்களை, குருமார்களை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  5. எச்சரிக்கை உணர்வோடும் விழிப்புணர்வோடும் எதையும் அணுக வேண்டும்.
  6. தெய்வ பக்தி என்கிற வெளிச்சம் பாய்ச்ச வேண்டும். பக்தி நல்ல வழி காட்டும்.

மகர ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி கடந்து விட்டது. இப்பொழுது அவர்கள் ஒரு பக்குவம் பெற்றிருப்பார்கள். அந்த பக்குவத்தோடு இனி வரும் பிரச்னையை அணுக வேண்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்மச் சனி நடக்கிறது. மனதில் எப்பொழுதும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். தியானம் பழகுங்கள். எதையும் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். குறைவாக எதிர்பாருங்கள். எப்பொழுதும் மாற்று வழியை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு, கண்டச் சனி நடக்கிறது. கணவன்-மனைவி உறவுகளை மிகவும் கவனத்தோடு கையாள வேண்டும். சின்ன சின்ன விஷயங்களையும் பெரிதாக எடுத்துக்கொண்டு சண்டையை அதிகப்படுத்தக் கூடாது.

உடனுக்குடன், ‘‘ம்… நம் மனைவி தானே, நம் கணவன் தானே, போனால் போகிறது’’ என்று சமாதானம் ஆகிவிட வேண்டும். ஏழாம் இடம் என்பதால் நண்பர்களிடம் எச்சரிக்கையோடு பழக வேண்டும். கூட்டுத் தொழிலில் கவனம் வேண்டும் புது நபர்களை நம்பி முதல் போட்டு ஏமாந்துவிடக்கூடாது.
கடைசியாக ஒரு விஷயத்தைச் சொல்லுகின்றேன். இதுதான் மிக முக்கியமான விஷயம்.

பிரச்சனைகள் என்பது எல்லா நேரங்களிலும் வரும். சுபப் பெயர்ச்சியாக இருந்தால் பிரச்னைகளை சரியாக கையாண்டு வெற்றி பெற்று விடுவோம். தீமையான பெயர்ச்சியாக இருந்தால் இதே பிரச்னைகளை கையாளத் தெரியாமல் தடுமாறி விடுவோம். அது கஷ்டத்தைக் கொடுக்கும். அவ்வளவு தான் வித்தியாசம். இனி, இந்த சனிப்பெயர்ச்சியை எப்படி எதிர்கொள்வது என்பது உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ்.கோகுலாச்சாரி

Tags : Saturn ,Vakya Panchangam ,
× RELATED சனி பிரதோஷ வழிபாடு