×

சிறுமி டானியா பள்ளிக்கு செல்ல தொடங்கிவிட்டதை அறிந்து மகிழ்ந்தேன்: முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: ஆவடி அருகே முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்று, நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சிறுமி டானியா பள்ளிக்கு செல்ல தொடங்கிவிட்டதை அறிந்து மகிழ்ந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களோடு அன்பான நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், இவரது மனைவி சவுபாக்யா இவர்களின் மகள் டானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். ஆகவே, தனக்கு உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வருக்கு சிறுமி டானியா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து பூந்தமல்லி அருகே தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி சிறுமி டானியாவுக்கு, 8 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு முக சீரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு, செப்டம்பர் மாதத்தில் சிறுமி டானியா வீடு திரும்பினார்.

தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமி டானியா வீட்டுக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். இந்நிலையில், இரு கட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்ற சிறுமி டானியா இல்லம் தேடி கல்வி மூலம் 4-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இச்சூழலில், சிறுமி டானியாவை மீண்டும் வீராபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்க நேற்று காலை மாதவரம் எம்எல்ஏஎஸ்.சுதர்சனம் தலைமையில் திமுக நிர்வாகிகள் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுமி டானியா 5-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அப்போது, டானியா 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி கற்பதற்கான செலவை தான் ஏற்றுக்கொள்வதாக பள்ளி நிர்வாகத்திடம் உறுதியளித்த எம்எல்ஏ சுதர்சனம், 5-ம் வகுப்புக்கான கல்விக் கட்டணத்தை அப்போதே செலுத்தினார். முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் சிறுமி டானியாவை நன்றாக கவனித்து கொள்ளும் படி பள்ளி நிர்வாகத்திடம் சுதர்சனம் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமி டானியா பள்ளிக்கு செல்ல தொடங்கிவிட்டதை அறிந்து மகிழ்ந்தேன் என்றும் ஆசிரியர்களோடு அன்பான நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன் என்றும் டிவிட்டரில் சிறுமி டானியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Tania ,Principal ,Stalin ,CHENNAI ,Aavadi ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...