×

முதல் வெற்றியை ருசிக்க மும்பை-டெல்லி இன்று மோதல்

புதுடெல்லி: 16 வது சீசன் ஐ.பி.எல். தொடரில் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் 16-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத இவ்விரு அணிகளும் முதல் வெற்றிக்காக முனைப்பு காட்டுகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி.யிடமும், 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடமும் தோல்வியடைந்தது. மும்பையின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எடுபடவில்லை.

கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் இன்னும் முழுமையான அதிரடியை காட்டவில்லை. ரூ.17½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனும் சோபிக்கவில்லை. இதேபோல் சூர்யகுமார் யாதவின் மோசமான பார்ம் தொடருகிறது. இரு போட்டிகளில் 15, 1 ரன் மட்டுமே எடுத்துள்ளார். அனைத்து வீரர்களும் பங்களித்தால் மட்டுமே மும்பையால் எழுச்சி பெற முடியும். காயமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த போட்டியிலும் ஆடுவது சந்தேகம் தான்.

டெல்லி அணியும் லக்னோ, குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம் வரிசையாக தோல்வியடைந்தது. டெல்லி அணியில் கேப்டன் வார்னர் (56, 37 மற்றும் 65 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் சிறப்பாக இல்லை. மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷா வேகப்பந்து வீச்சில் தடுமாறுகிறார். அவர் 3 போட்டிகளில் 12, 7, 0 ரன்னில் அவுட்டானார். ஆல்-ரவுண்டரான ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் திருமணத்திற்காக தாயகம் சென்றிருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை. உள்ளூரில் ஆடுவது டெல்லிக்கு சற்று சாதகமாக இருக்கலாம். சம பலம் கொண்ட இரு அணிகளும் முதல் வெற்றிக்காக மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை ஆடி 32 ஆட்டங்களில் 15-ல் டெல்லியும், 17 ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.

Tags : Mumbai ,Delhi ,New Delhi ,IPL ,Arun Jaitley Stadium ,
× RELATED 25 கிலோ தங்கம் கடத்திய ஆப்கான் தூதரக பெண் அதிகாரி திடீர் ராஜினாமா