×

சுரண்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்-கல்வி அதிகாரி, தாசில்தார் சமரசம்

சுரண்டை : சுரண்டை அருகே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து வந்த மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் தாசில்தார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் 80 ஆண்டுகள் பழமைவாய்ந்த துவக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. அதன்ஒரு பகுதியில் தேவாலயமும் இருந்து வந்தது. பின்னர் ஏற்பட்ட இட நெருக்கடி மற்றும் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை காரணமாக இப்பள்ளி வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது.

மேலும் அந்த இடத்தில் இருந்த பள்ளி கட்டிடம் கடந்த 2018ம் ஆண்டு இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அதே இடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் தேவாலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதுகுறித்து தெரியவந்ததும் திரண்டுவந்த கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து வந்த ஆலங்குளம் டிஎஸ்பி மற்றும் போலீசார் சமரசத்தில் ஈடுபட்டபோதும் இதை கிராம மக்கள் ஏற்கமறுத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 42 பெண்கள் உள்ளிட்ட 88 பேரை கைது செய்த போலீசார், தனியார் மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அச்சங்குன்றம் துவக்கப் பள்ளியில் மொத்தம் படித்து வரும் 174 மாணவ- மாணவிகளில் அச்சங்குன்றத்தைச் சேர்ந்த சுமார் 160க்கும் மேற்பட்ட குழந்தைகளை அவர்களது பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப மறுத்து அதே பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி அலோசியஸ் கிறிஸ்டோபர், வீ.கே.புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி, ஏஎஸ்பி சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி, துணை தாசில்தார் முருகன்,விஏஓ அந்தோனி மற்றும் போலீசார் சமரசப்படுத்தினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் வெங்கடேஸ்வரி முருகேசன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வெள்ளத்துரை,நாட்டாண்மை சுப்பிரமணியன், நிர்வாகிகள் ராஜேந்திரன், இசக்கி, சுப்பையா, வசந்தகுமார் ஆகியோரிடம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அச்சங்குன்றம் கிராம மக்கள் இந்த கல்வியாண்டில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் இந்தாண்டு தேர்வை தனியாக எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை கல்வி அதிகாரியிடம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதனால் அச்சங்குன்றத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

Tags : Surandi-Education ,Officer ,Tahsildar ,Surandai ,
× RELATED தாசில்தாரின் கார் மோதி வாலிபர் பலி