×

வேண்டிய வரமருளும் வேதாரண்யேஸ்வரர்

வேதங்கள் தமது மந்திர அதிர்வுகளால் வேதாரண்யம் எனும் தலத்தின் கோயில் வாயிலை அடைத்தனர். தாம் அடைத்த கதவுகளை தமக்கு நிகரான அருந்தமிழ் மீண்டும் திறக்கும் என்று அப்போதே உணர்ந்தனர். கோயிலைச் சுற்றி சிறு செடிகள், கொடிகள், பெரு மரங்கள் என்று பெரிய வனமாக மாற்றினர். வாயு தேவன் வருடலால் செடி, கொடிகள் அசைய, அந்த அசைவுகளே வேத ஒலியாக மீண்டும் மீண்டும் ஈசனைத் தழுவிச் சென்றன. இவ்வாறு வேதங்கள் பூசித்து காடாக பரவியதால் ஈசனுக்கு ‘வேதாரண்யேஸ்வரர்’ என்றும், அத்தலத்தை ‘வேதாரண்யம்’ என்றும் ஆதி நாளிலேயே வழங்கினர்.

சைவத்தை தம் தீந்தமிழால் தழைக்கச் செய்துவரும் திருநாவுக்கரசரும், குழந்தை சம்பந்தரும் வேதாரண்யேஸ்வரரை நோக்கி வந்தார்கள். திருவிழா போல ஊரார் திரண்டு இருவரையும் வரவேற்றனர். அடியார்கள் கூட்டம் ஞானியர்களோடு நடந்து வேதாரண்யேஸ்வரர் கோயிலின் ராஜவாயிலின் கதவருகே நின்றனர். வேதத் திரட்சி அந்தக் கதவின் எல்லாபுறமும் அடைத்திருப்பதை புரிந்து கொண்டனர். திருநாவுக்கரசரும், சம்பந்தப் பெருமானும் நெடிதுயர்ந்து நின்ற அந்த மறைக்கதவின் முன்பு பணிந்து எழுந்தனர். ‘‘வேதாரண்யேஸ்வரா, மறைக்காடனே, தங்களை தரிசிக்கும் பொருட்டு வந்துள்ள எம் முன்புள்ள இந்தக் கதவை திறந்தருள்வாயா’’ என்று சம்பந்தர் வேண்டிக் கொண்டார்.

ஆனால், மறைக்கதவோ மௌனம் பூண்டது. உடனே சம்பந்தர், ‘‘அப்பரே இக்கதவின் பூட்டைத் திறக்கவல்ல அற்புதப் பதிகத்தை பாடுங்களேன்’’ என்று கேட்டுக் கொண்டார். தமிழ்த் தேன், நாவுக்கரசரின் நாவில் ஊறித் தளும்பியது. ‘‘பண்ணின் நேர் மொழியாளுமை பங்கரோ’’ என்று தொடங்கி, ‘‘திண்ணமாகத் திறந்தருள் செய்மினே’’ என்று முதற் பதிகம் பாடினார். நாவுக்கரசரின் நாவால் இன்னும் சில பதிகங்கள் பாடிக் கேட்கும் ஆவலுடன் கதவு திறக்க மறுத்து, மயங்கி நின்றது. இன்னும் நெருங்கி கதவருகே நின்றார்.

‘‘அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர் சரக்கவிக்கதவந் திறப்பிம்மினே’’ என்று உருகிக் கேட்டபோது ஈசன் இனியும் அடியவரை சோதித்தல் முறையல்ல என்றுணர்ந்தான். வேதாரண்யேஸ்வரரின் முன்பிருந்த அந்தப் பெருங்கதவு இடி முழக்கமாகத் திறந்து கொண்டது. கதவடைத்திருந்த நான்மறைகளும் சட்டென்று விடுபட்டு அவர்களை வரவேற்கும் விதமாக, வேதகானங்கள் எட்டுத் திக்கும் ஒலித்தன. ‘வேதாரண்யம் விளக்கழகு’ என்று சொல்ல வைத்தன மறைக்காடனின் சந்நதியில் ஒளிர்ந்த தீபங்கள்.

வேதாரண்யேஸ்வரரை தரிசித்து கோயிலின் வாயிலுக்கு வந்தார்கள். இந்த மறைக்கதவு திறந்தும், மூடியும் நடக்கும் வழியை திருத்தியமைக்குமாறு ஞான சம்பந்தப் பெருமானிடம் அப்பர் கூற, அப்பொழுதே ஓர் பதிகம் பாடினார் சம்பந்தர். மறைக்கதவு அந்த ஒரு பாட்டிற்கே சட்டென்று மூடிக்கொண்டது. தான் பத்துப் பாடல்கள் பாடியும் கதவு திறக்காததும், சம்பந்தரின் ஓர் பதிகத்திற்கே கதவு மூடிக்கொண்டதும் அப்பர் மனதில் ஓர் அயர்வை ஏற்படுத்தியிருந்தது. திருமடத்திற்குள் சென்ற அப்பர் சற்று கண்ணயர்ந்தார். கனவில் ஈசன் சிரித்தார்.

‘நீர் திருவாய்மூர் எனும் தலத்திற்கு வருக’ எனப் பணித்தார். சட்டென்று எழுந்து, திருவாய்மூர் எனும் தலம் நோக்கிச் சென்றார் அப்பர். ஈசன் அப்பருக்கு பொற்கோயிலைக் காட்டி மறைந்தார். சம்பந்தர் அப்பரைத் தொடர்ந்து வந்தார், சம்பந்தருக்கும் திருவாய்மூரிலே வாய்மூர்நாதர் தனது ஆடற்கோலத்தைக் காட்டி தரிசிக்க வைத்தார். மீண்டும் திருமறைக்காட்டிற்கே வந்து சில காலம் தங்கினர். மறைக்காட்டு மணாளனை தரிசித்து மகிழ்ந்தனர்.

அகத்தியருக்குத் திருமணக் காட்சி இங்கு கிட்டியதால், ஈசன் ‘மறைக்காட்டு மணாளன்’ ஆனார். இத்தகைய நெகிழ்வூட்டும் நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டதுதான் வேதாரண்யம் மறைக்காட்டீசன் ஆலயம். நெடிதுயர்ந்து வரவேற்கும் ஐந்து நிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் கடற்காற்றோடு வேதநாதமும் தென்றலாகத் தவழ்ந்து வருகிறது. மைதானம் போன்றொரு மிகப்பரந்த வெளியின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. தென்கிழக்குப் பகுதியில், கங்கையின் ஒரு படித்துறையை நினைவூட்டும் விதமாக மணிகர்ணிகை தீர்த்தம்.

திருமறைக்கதவு சிலிர்ப்பூட்டுகிறது. வெள்ளித் தகடு வேய்ந்து கதவினை அலங்கரித்திருக்கிறார்கள். கதவை கையால் வருடும்போது அதிலிருந்து வேத அலைகள் உயிரைத் தழுவுகிறது. நேரே வேதாரண்யேஸ்வரர் சந்நதி விளக்கொளியில் ஜொலிக்கிறது. மறைக்காடனை பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே மயிர்க்கூச்செறியச் செய்கிறது. அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்று நகர்கிறோம். நான்கு வேதமூர்த்திகளின் உலோகச் சிலைகள் கதவடைத்த கதையை புன்னகையால் தெரிவிக்கின்றன.

வேதாரண்யேஸ்வரரின் பின்புறம், ஈசன், உமையோடு திருமணக் கோலத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறார். ஈசனின் அருட்பாணம் நம்மைத் துளைக்கிறது. வேண்டிய வரமல்லாது தன்னையே தரும் தயாபரனாக விளங்குகிறான், இந்த மறைக்காடன். திருமணமா, குழந்தைப்பேறா, வேலையா… வாழ்க்கையின் அனைத்துத் தேவைகளுக்கும் மறைக்காடர் துணை நிற்கிறார். ரத்ன சிம்மாசனத்தில் புவனிவிடங்கராக ஹம்சபாத நடனமாடியபடி தியாகராஜப் பெருமான் காட்சியளிக்கிறார். அருகேயே சப்தவிடங்கலிங்கங்களுள் ஒன்றான மரகதலிங்கம் அமைந்துள்ளது.

அங்கிருந்து உட்கோயிலை வலமாக வருகையில் வேதவன விநாயகர், தட்சிணாமூர்த்தி, சந்திரசேகரர், முருகன், மகாலட்சுமி சந்நதிகள் அமைந்துள்ளன. அங்குள்ள சுவர்களில் மிகப் பழமையான பெரிய புராண ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பிராகாரத்தை வலம் வருகையில் மிகப்பெரிய சரஸ்வதியை தரிசிக்கலாம். வேறெங்கும் காண முடியாத வடிவில், வீணையில்லாத கைகளில் சுவடியோடு வீற்றிருக்கிறார். இத்தலத்து உமையம்மையின் குரல் யாழைவிட இனிமையாக இருப்பதால்தான் அன்னை வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள்.

அதனாலேயே அம்பாளின் திருப்பெயர், ‘யாழைப்பழித்த மொழியம்மை’. இத்தலத்து துர்க்கை அம்மன் பேரழகியாக விளங்குகிறாள். நல்ல உயரம். ஒயிலான வளைந்த இடுப்பு. அதி நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள். ஒரு சிறு பெண் நின்று உயிரோடு இளகி நம்மோடு பேசுவது போல் உள்ளது. ‘என்ன வேண்டும் உனக்கு?’ என்று புன்னகைத்து கேட்கும் பாங்கு. பக்தர்கள் தங்கள் வீட்டுப் பெண் போல உரிமையோடு அவளிடம் வேண்டி நிற்கிறார்கள். வேண்டிய வரங்களை துர்க்கையும் வாரிவாரித்தான் கொடுக்கிறாள்.

துர்க்கையம்மனின் பேரன்பில் முகிழ்ந்தெழுந்து அம்பாளின் சந்நதியை நோக்கி நகரலாம். யாழைப் பழித்த மொழியம்மை எனும் திருப்பெயரை உச்சரிக்கும்போதே நெஞ்சில் அமுதூறுகிறது. யாழைப்பழித்த மொழியாளின் விழிகள் கருணையை மழையாகப் பொழிகிறது. தன் திருப்பெயர் போலவே வாழ்விலும் இனிமை கூட்டுகிறாள். சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் என்று எல்லா ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.

தொகுப்பு: கிருஷ்ணா

The post வேண்டிய வரமருளும் வேதாரண்யேஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Vedaranyeswarar ,Vedas ,Vedaranyam ,Varamarulum ,
× RELATED நீண்ட ஆயுளோடு நிறைவான வாழ்க்கை :ஜோதிட ரகசியங்கள்