×

அலுவலக பணி நேரத்தில் இருக்கையில் இல்லாதவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை-காரைக்கால் கலெக்டர் எச்சரிக்கை

காரைக்கால் : அலுவலக பணி நேரத்தில் இருக்கையில் இல்லாதவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் கலெக்டர் குலோத்துங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வரவில்லை எனவும், இதனால் கோப்புகள் தேக்கம் அடைவதாகவும் பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ள குலோத்துங்கன் பல்வேறு அதிரடி ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணியில் இருக்கும் படியும், பொதுமக்கள் தங்களது பணிகளுக்காக வரும் போது அரசு அதிகாரிகள் அவரவர் இருக்கையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆய்வு மேற்கொள்ளும் பொழுது அலுவலக நேரங்களில் ஊழியர்கள் இல்லாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் என கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் காரைக்கால் மதகடியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நிர்வாகம் வளாகத்தில் நேற்று காலை 9.50 மணிக்கு திடீரென அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். அப்போது காமராஜர் வளாகத்தில் உள்ள காரைக்கால் டவுன் பிளானிங் அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம், குடிமை பொருள் வழங்கல் துறை உள்ளிட்ட வளாகத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலகங்களிலும் எல்.டி.சி மற்றும் யு.டி.சி ஊழியர்களை தவிர 90 சதவீத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவலக நேரத்தில் இருக்கையில் இல்லாதது தெரியவந்தது.

இதையடுத்து அனைத்து அலுவலகத்தில் உள்ள வருகை பதிவேடுகளை சேகரித்த கலெக்டர் குலோத்துங்கன் பணிக்கு தாமதமாக வந்தவர்களையும், விடுமுறை மற்றும் பணி நேரத்தில் இருக்கையில் இல்லாதவர்களை கலெக்டர் அலுவலகத்தில் நேரில் அழைத்து முதல் தடவை எச்சரிக்கை அளித்தார். மேலும் இதுபோன்று மீண்டும் நடைபெற்றால் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அதேபோல் விழிதியூர் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். முதலில் விழிதியூரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பார்வையிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார். மேலும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா என்று கேட்டறிந்தார்.
பள்ளி கட்டிடங்களில் ஆய்வு செய்த கலெக்டர் குலோத்துங்கன் சில இடங்களில் கட்டிடம் பழுதாகி இருப்பதை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தரமான குடிநீரை மாணவர்களுக்கு தருவதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என ஆசிரியர்களை கலெக்டர் கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து விழிதியூரில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குலோத்துங்கன் மருந்துகள் இருப்பு நிலவரம், நோயாளிகள் தங்குவதற்கு தேவையான படுக்கை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் கால்நடை மருத்துவமனையில் ஆய்வு செய்த கலெக்டர் குலோத்துங்கன், அகலங்கண்ணு குடிநீர் தொட்டியை பார்வையிட்டு குடிநீரில் சேர்க்கப்படும் குளோரின் அளவு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

The post அலுவலக பணி நேரத்தில் இருக்கையில் இல்லாதவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை-காரைக்கால் கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Karahikal ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...