×

வடலூர் அருகே சென்டர் மீடியனில் கார் மோதி 10ம் வகுப்பு மாணவி பரிதாப பலி

*பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம்- தீவிர சிகிச்சை

வடலூர் : குறிஞ்சிப்பாடி பைனான்ஸ் அதிபர் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று திரும்பியபோது வடலூரில் நேற்று அதிகாலை சென்டர் மீடியனில் கார் மோதி பத்தாம் வகுப்பு படித்துவந்த அவரது மகள் பரிதாபமாக பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.எஸ். நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் அன்புச்செழியன் (46). பைனான்ஸ் தொழிலதிபர். இவரது மனைவி செல்வி (41). இவர்களுக்கு தக்‌ஷனா (15) என்ற மகளும், ஜெயவர்தன் (13) என்ற மகனும் உள்ளனர். தக்‌ஷனா நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது நடந்து வரும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். ஜெயவர்தன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்ேபாது தொடர்விடுமுறை விடப்பட்டதால் அன்புச்செழியன் குடும்பத்துடன் தனக்கு சொந்தமான காரில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு நேற்று முன்தினம் மாலை குறிஞ்சிப்பாடிக்கு காரில் புறப்பட்டனர். அன்புச்செழியன் காரை ஓட்டிவந்தார். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சேலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் தனியார் பள்ளி அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள சென்டர்மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளாகி நொறுங்கியது.

காரில் பயணம் செய்த அன்புச்செழியன் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கிய 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதல்உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே தக்‌ஷனா (15) பரிதாபமாக இறந்தார். அவரது தந்தை, தாய் மற்றும் தம்பி ஆகிய மூவரும் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சுயநினைவின்றி இருப்பதால் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் வடலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post வடலூர் அருகே சென்டர் மீடியனில் கார் மோதி 10ம் வகுப்பு மாணவி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Vadalur ,Kurinchippadi ,Tiruchendur ,Paritabha Pali ,
× RELATED மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் காயம்