×

ஆண்டிபட்டி அருகே 1000 ஆண்டுகள் பழமையான மாவூற்று வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம்: அரோகரா கோஷம் விண்ணதிர்ந்தது

ஆண்டிபட்டி, ஏப். 11: ஆண்டிபட்டி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாவூற்று வேலப்பர் கோயிலின் கும்பாபிஷேக விழா பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மாவூற்று வேலப்பர் கோயில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைப்பகுதியில் வசித்த பழங்குடியின மக்கள் உணவுக்காக கிழங்கை தோண்டிய போது, சுயம்புவாக உருவான வேலப்பர் சாமியை கடவுளாக வணங்கி அதே பகுதியில் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். பழமையான வரலாற்றை கொண்ட மாவூற்று வேலப்பர் கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் கடந்த 2002ம் ஆண்டுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.மாவூற்று வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, 22 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை காண ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். முன்னதாக யாக பூஜைகளுக்கு பின்னர் பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கோயில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷமிட அங்கிருந்தவர்களை பரவசமடைய செய்தது. அதன்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மாவூற்று வேலப்பருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆண்டிபட்டியில் இருந்து மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் நதியா தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post ஆண்டிபட்டி அருகே 1000 ஆண்டுகள் பழமையான மாவூற்று வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம்: அரோகரா கோஷம் விண்ணதிர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Mavoortu Velapar temple ,Andipatti ,Antipatti ,
× RELATED தேவங்குடி கோதண்ட ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்