×

ஆந்திராவில் இருந்து அத்திப்பட்டுக்கு கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது: 12 கிலோ, ஆட்டோ பறிமுதல்

பொன்னேரி: ஆந்திராவில் இருந்து அத்திப்பட்டுக்கு கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து அத்திப்பட்டு பகுதிக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாள் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பட்டமந்திரி பெட்ரோல் பங்க் அருகே ஆந்திராவில் இருந்து வந்த ஆட்டோவை மடக்கி அதிலிருந்த 3 பேரிடம் தீவிரமாக விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமான தனிப்படை போலீசார், ஆட்டோவை சோதனை செய்தனர். சீட்டுக்கு அடியே 12 கிலோ 500 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து 3 பேரும் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (28), செங்கல்பட்டு, தாழம்பூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21), ஆவடி, பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (21) எனத் தெரியவந்தது. மேலும், அவர்கள் 3 பேரும் அத்திப்பட்டு கஞ்சா வியாபாரி தமிழரசனுக்காக ஆந்திராவில் இருந்து ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்ததாகவும், அவர் அத்திப்பட்டு, மீஞ்சூர் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில்லறையில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான கஞ்சா வியாபாரி அத்திப்பட்டு தமிழரசனை தேடி வருகின்றனர்.

The post ஆந்திராவில் இருந்து அத்திப்பட்டுக்கு கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது: 12 கிலோ, ஆட்டோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Andhra ,Attipat ,Ponneri ,Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED மே 13-ம் தேதி வரை ஆந்திர அரசு பணப் பரிவர்த்தனை செய்ய தடை..!!