×

சேலம் அரசு மருத்துவமனையில்கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தயார்நோயின் வீரியம் அதிகமிருக்காது என டீன் தகவல்

சேலம், ஏப்.11: சேலம் அரசு மருத்துவமனையில் அரசின் உத்தரவுபடி கொரோனா சிகிச்சைக்கான வார்டுகள், பரிசோதனை மையங்கள் தயார் படுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல், நோயின் வீரியம் அதிகமிருக்காது என டீன் மணி தெரிவித்தார். நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் ஏற்பட்டது. அப்போது, முழு ஊரங்கு அறிவிக்கப்பட்டு, நோய் தொற்று பரவலை தடுத்தனர். இருப்பினும் கோடி கணக்கானோர் கொரோனா நோய் பாதிப்பிற்கு ஆளாகினர். அடுத்து 2021ம் ஆண்டில் இரண்டாவது அலையாக கொரோனா பரவல் இருந்தது. அப்போது, பெரும்பாலானோருக்கு ஆக்சிஷன் தேவை ஏற்பட்டது. இதனால், அந்த நேரத்தில் உயிரிழப்பு அதிகரித்தது. பின்னர், படிப்படியாக கொரோனா தொற்று பரவல் குறைந்து, நின்றது.

இந்நிலையில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் கடந்த 10 நாட்களில் வட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்பேரில், தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி, அதனை நடைமுறை படுத்தியுள்ளனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிந்திட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கொரோனா நோய்க்கான சிகிச்சை அளிக்க அனைத்து வித ஏற்பாடுகளையும் தயார் படுத்தி வைத்து, ஒத்திகை நடத்திட சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதன்பேரில், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் நேற்று, கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள மையத்தை டீன் மணி தலைமையிலான மருத்துவக்குழுவினர் தயார் படுத்தி வைத்தனர். அங்கு, கொரோனா தொற்று அறிகுறியுடன் வரும் நபர்களை பரிசோதித்து, அவர்களின் உடலில் இருக்கு தொற்று பாதிப்பு அளவிற்கு ஏற்ப உரிய சிகிச்சையை அளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த வழிகாட்டுதல் மையத்தில், தற்காலிக படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி அரசு மருத்துவமனை டீன் மணி கூறியதாவது:தற்போது பரவும் கொரோனா தொற்று, பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த பரவலும், அதன் வீரியமும் அதிகமில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவமனைக்கு 20 கொரோனா நோயாளிகள் வருகிறார்கள் என்றால், அவர்கள் அனைவருமே வீட்டில் இருந்து மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு லேசான பாதிப்புடனே வருகின்றனர். மருத்துவர்களின் உரிய அறிவுரைப்படி, அவர்களும் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது, மருத்துவமனையில் 6 கொரோனா நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் ஓரிருநாளில் குணமடைந்து வீடு திரும்புவார்கள். மெடிக்கல் பிளாக்கில் ஆக்சிஷன் வசதியுடன் 100 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே. ஏற்கனவே போட்டுக் கொண்ட தடுப்பூசிகளின் மூலம் நல்ல முறையில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறது. அதனால், யாரும் பயப்பட தேவையில்லை. இருப்பினும் மருத்துவமனைகள், அதிகபடியான நபர்கள் கூட்டங்களுக்கு செல்லும்போது, முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அதை செய்தாலோ கொரோனா நோய் பரவல் இருக்காது. இவ்வாறு டீன் மணி கூறினார்.

The post சேலம் அரசு மருத்துவமனையில்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தயார்
நோயின் வீரியம் அதிகமிருக்காது என டீன் தகவல்
appeared first on Dinakaran.

Tags : dean ,Salem Government Hospital ,Salem ,Dinakaran ,
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்