×

நாமக்கல் மாவட்டத்தில்பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்ஆசிரியர்கள் வீடு, வீடாக செல்கிறார்கள்

நாமக்கல், ஏப்.11: அனைவருக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர், திருச்செங்கோடு, கபிலர்மலை, மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட 15 வட்டாரங்களில், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நாமக்கல் நரிக்குறவர் காலனியில் அனைருக்கும் ஒருங்கிணைந்த கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கணக்கெடுப்பு பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி செல்லா குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், மேற்பார்வையாளர் சசிராணி, ஆசிரியர் பயிற்றுனர் கிருஷ்ணலட்சுமி, பெரியப்பட்டி தலைமை ஆசிரியர் பத்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கணக்கெடுப்பு பணி மே இறுதி வாரம் வரை நடைபெறுகிறது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்க அதிகாரிகள் கூறியதாவது: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, 6 முதல் 18 வயதுடைய அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும், முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்து, பள்ளி கல்வியை முடிக்க செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6 முதல் 18 வயதுடைய இடைநின்ற பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிவதற்கு, சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிவதற்காக, குடியிருப்பு வாரியான பள்ளியே செல்லாக் குழந்தைகள் அனைவரும் \”பள்ளிக்கு வெளியே உள்ளவர்கள்” ஆவர். 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாமல் இடையில் நின்றவர்களை கண்டறிந்து, பள்ளிகள் மற்றும் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்படுவார்கள்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும், எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல், வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. குறிப்பாக இடம்பெயர்ந்த குடும்பத்தை சார்ந்த(6 முதல் 18 வயது வரை உள்ள) அனைத்து பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளின் எண்ணிக்கையை மிக சரியாக, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள், செங்கல் சூளை, அரிசி ஆலை, நூற்பாலை, கல்குவாரி, மணல் குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் போன்றவற்றில் பணிபுரிய பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் தொழில் நிமித்தமாக வருகிறார்கள்.

தொழிற்சாலை, சந்தைகளில் குழந்தைத் தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் காவல் துறையுடன் இணைந்து இக்கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. வீடு வாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி, குடிசை பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில், பள்ளி செல்லா குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால், 1098 என்ற இலவச சேவை எண் அல்லது சார் வட்டார வளமையத்திற்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post நாமக்கல் மாவட்டத்தில்
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்
ஆசிரியர்கள் வீடு, வீடாக செல்கிறார்கள்
appeared first on Dinakaran.

Tags : Namakkal ,school cella ,School ,
× RELATED நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை!