×

அரசு மருத்துவமனைகளில்கொரோனா சிகிச்சை ஒத்திகை

தர்மபுரி, ஏப்.11: தர்மபுரி மாவட்டத்தில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிப்பது குறித்து நேற்று ஒத்திகை நடந்தது. இதனை சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குனர் காணொலி மூலம் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் தலைமை அரசு மருத்துவமனை, 3 தாலுகா அரசு மருத்துவமனை, 51 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 225 துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், ஊழியர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிகின்றனர்.

இதனிடையே, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 2வது மாடியில், 100 படுக்கை வசதியுடன் கொரோனா வார்டு நேற்று தொடங்கப்பட்டது. மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புறநோயாளிகள் சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் சுழற்சி முறையில் சிகிச்சை அளிக்க, டீன் அமுதவல்லி தலைமையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு, தடுப்பு ஒத்திகை நடந்தது. இதில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மாதிரி ஒத்திகை நடந்தது.

கொரோனா நோயாளி போல் நடித்த ஒருவரை ஆம்புலன்சில் ஏற்றி வந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மாதிரி ஒத்திகை நடந்தது. டீன் அமுதவல்லி, மருத்துவ கண்காணிப்பாளர் சிவக்குமார், ஆர்எம்ஓ காந்தி, டாக்டர்கள் சந்திரசேகர், இளங்கோவன் மற்றும் செவிலியர்கள், மருத்துவபணியாளர்கள், ஊழியர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் ஒத்திகை நடத்தினர். நேற்று மருத்துவக்கல்லூரி இயக்குனர் சாந்திமலர், காணொலி மூலம் சென்னையில் இருந்து தர்மபுரி டீன், மருத்துவ கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன், கொரோனா தொற்று குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.

பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை 2 மணிநேரம் இந்த கலந்தாய்வு நடந்தது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை கட்டமைப்புகள் குறித்தும், கொரோனா நோயாளிகளை கையாளும் அளவுக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், ஆக்சிஜன் இருப்பு, மருத்துவ கருவிகள், பணியாளர்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து தர்மபுரி டீன் அமுதவல்லி கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் கடந்த வாரம் ஒரு கர்ப்பிணிக்கும், வெளியூர் சென்று திரும்பிய ஒருவருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் நலமுடன் வீடு திரும்பினர். தற்போது தர்மபுரி அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை. கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க படுக்கை, மருந்து, மாத்திரைகள், கவச உடைகள் தயார் நிலையில் உள்ளன. முககவசம் அணிந்து தான் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும்,’ என்றார். இதேபோல், மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி தலைமையில், பாலக்கோடு அரசு மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதுகாப்பு, தடுப்பு ஒத்திகை நடந்தது.

The post அரசு மருத்துவமனைகளில்
கொரோனா சிகிச்சை ஒத்திகை
appeared first on Dinakaran.

Tags : treatment ,Dharmapuri ,Dharmapuri district ,Corona treatment practice ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது