×

ஆவடி காவல்நிலைய பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆவடி: சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செல்போன், பணம், வாகன திருட்டு, வழிப்பறி, வீடு மற்றும் கடைகளை உடைத்து கொள்ளை உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஆவடி காவல்நிலைய பகுதியில் தொடர்ந்து 2வது முறையாக ஒரு தனியார் வணிக வளாகத்தில் உள்ள 8 கடைகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் ரூ9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை போனது. இதேபோல் திருமுல்லைவாயல் காவல் நிலைய பகுதியில் செல்போன் பறிக்கும் மர்ம கும்பலை பிடிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டி வருகின்றனர். அப்படியே குற்றவாளிகளை கைது செய்தாலும், அவர்களிடம் எந்தவொரு பொருட்களையும் மீட்காமல் சிறையில் அடைத்து வருவதாக பொருட்கள் மற்றும் பணத்தை பறிகொடுத்தவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும், குற்றச்செயல்களில் 3 பேர் ஈடுபட்டால், அவர்களில் ஒருவரை மட்டும் போலீசார் பிடித்து விசாரித்து சிறையில் அடைக்கின்றனர்.

மற்ற இருவரை தலைமறைவு என கூறிவருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் வீடு புகுந்து கொள்ளை மற்றும் வாகனத் திருட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க செல்லும் மக்களிடம், ஒரு வாரம் கழித்து சிஎஸ்ஆர் பெற்று கொள்ளும்படியும், எப்ஐஆரை ஒரு மாதமோ அல்லது 2 மாதங்கள் கழித்தோ வந்து பெற்றுக் கொள்ளும்படி போலீசார் அலைக்கழித்து வருகின்றனர். யாரேனும் கட்சி பிரமுகர் சிபாரிசுடன் வருபவர்களுக்கு ஒரு வாரத்தில் எப்ஐஆர் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர, செல்போன் பறிப்பு குறித்து புகாரை ஏற்காமல், செல்போன் தொலைந்துவிட்டது. கண்டுபிடித்து தரும்படி புகார் எழுதி வாருங்கள். அப்போதுதான் புகாரை ஏற்றுக்கொள்வோம் என குற்றப்பிரிவு போலீசார் அடாவடி செய்து வருகின்றனர்.

இதுபோன்ற காவல்துறை சார்ந்த நபர்கள் செய்யும் மெத்தன செயல்களால், ஒட்டுமொத்த காவல்துறைக்கே அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே, ஆவடி உள்பட அதன் சுற்றுவட்டார பகுதி காவல் நிலைய பகுதிகளில் குற்றச் சம்பவங்களை முழுமையாக தடுக்கவும், அங்கு மெத்தனமாக செயல்பட்டு வரும் காவலர்கள்மீது சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து சீரமைத்தால் மட்டுமே காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்தை மக்கள் மனதளவில் ஏற்றுக்கொள்வர். பணியில் அலட்சியம் காட்டி வரும் காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ஆவடி காவல்நிலைய பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Aavadi police station ,Aavadi ,Chennai ,Aavadi Tank Factory ,Tirumullaivayal Police Station ,
× RELATED சென்னை ஆவடி தேசிய நெடுஞ்சாலையில்...