×

குளத்தூர் அருகேநடத்தை சந்தேகத்தில்மனைவிக்கு அரிவாள் வெட்டு

குளத்தூர், ஏப்.11: குளத்தூர் அருகே பனையூரில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடிநாயக்கனுரைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் தமிழ்ச்செல்வம்(30), கூலித்தொழிலாளி. இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரையடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்த ராஜலெட்சுமி(27) என்பவருக்கும் கடந்த 10வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு கதிரவன்(9) என்ற மகனும், மதுவர்ஷா(6) என்ற மகளும் உள்ளனர். தமிழ்ச்செல்வத்திற்கு குடிபழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 3வருடத்திற்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து ராஜலட்சுமி, தனது பிள்ளைகளுடன் பனையூருக்கு வந்துவிட்டார். இங்கு உப்பளத்தில் வேலை செய்து குழந்தைகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பனையூருக்கு வந்த தமிழ்ச்செல்வம், மனைவியிடம் சேர்ந்து வாழ்வோம் என கூறியதையடுத்து சம்மதித்த ராஜலட்சுமி வாழ்ந்து வந்தனர். கடந்த சிலவாரங்களாக மீண்டும் குடித்து விட்டு தமிழ்ச்செல்வம், ராஜலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தமிச்செல்வம் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜலட்சுமியின் கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். ராஜலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த குளத்தூர் போலீசார் ராஜலட்சுமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து தலைமறைவான தமிழ்ச்செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post குளத்தூர் அருகே
நடத்தை சந்தேகத்தில்
மனைவிக்கு அரிவாள் வெட்டு
appeared first on Dinakaran.

Tags : Glattur ,Panayur ,Glathur ,
× RELATED அறிவியல் வினாடி வினா போட்டி: பனையூர் பள்ளி முதலிடம்