×

கோட்டாட்சியர் அலுவலகத்தில் வடிவேல் பட பாணியில் குளத்த காணோம் என்று புகார்

பொன்னேரி: பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற நபர் கையில் பதாகை ஏந்திய படி அய்யா குளத்தை காணோம், கண்டுபிடிச்சு குடுங்க என்று அலறியபடி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகத்திற்குள் நுழைந்த அந்த நபரின் புலம்பலை அதிகாரிகள் செவி கொடுத்து கேட்காததால், அலுவலக நுழைவு வாயில் முன்பாக அமர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ள குளங்களை மீட்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து விசாரித்த போது பூதூர் ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்ததாகவும் அதில் சர்வே எண். (36) (38) (42) (74) (188) (342) (344) அடங்கிய ஏழு குளங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அடுத்தடுத்து சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், பல ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் இந்த குளத்தின் நீரை பயன்படுத்தி வந்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட குளங்களை மீட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி பலமுறை ஏற்கனவே பொன்னேரி வட்டாட்சியர் முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வரையிலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து துணை தாசில்தார் பாரதி, புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை ஏற்று தனது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்த அந்த நபர், இதே நிலை தொடர்ந்தால் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்தார். நகைச்சுவை நடிகர் வடிவேல் திரைப்படம் ஒன்றில், வெட்டியக் கிணறு மாயமாகிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து அலப்பறை ெசய்வார். அதே போன்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏழு குளத்தை காணோம் என பூதூர் சிவக்குமார் அளித்த புகார் அங்கு இருந்தவர்கள் இடையே நகைச்சுவையை ஏற்படுத்தியது.

The post கோட்டாட்சியர் அலுவலகத்தில் வடிவேல் பட பாணியில் குளத்த காணோம் என்று புகார் appeared first on Dinakaran.

Tags : Kotaksiyar ,Sivakumar ,Bhudur ,Cholavaram panchayat ,Ponneri District Collector ,
× RELATED வாக்கு சாவடிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்