×

ஊத்துக்கோட்டை அருகே இருளர் இன மக்களுக்கு பட்டா: போராட்டம் வாபஸ்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே வாழவந்தான்கோட்டை இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கியதால், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற இருந்த காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த வாழவந்தான் கோட்டையில் இருளர் இன மக்கள் 75 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிமனை பட்டா, சுடுகாடு கேட்டு கடந்த இரண்டு வருடங்களாக போராடி வருகின்றனர். அங்குள்ள 53 தொகுப்பு வீடுகள் கட்டி 12 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை தொகுப்பு வீடுகளின் உள்ளேயும், வெளிச்சுவர்களில் சிமெண்ட் கலவை கொண்டு பூச்சு வேலை நடைபெறவில்லை. இதனால் சுவர்கள் வெயில், மழையில் பாதிக்கப்பட்டு உதிர்கிறது. கதவு, ஜன்னலும் வழங்காததால் பழைய சாக்கு பைகளைக்கொண்டு தடுப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தில் இணைந்து கடந்த 2 வருடங்களாக போராடி வந்தனர். நடவடிக்கை இல்லாத நிலையில் நேற்று ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் மேற்கொள்வது என்ற அடிப்படையில் முறையாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. தகவலறிந்த வட்டாட்சியர் வசந்தி காத்திருக்கும் போராட்டம் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாகவே 19 குடும்பங்களுக்கு குடிமனை பட்டாக்களை வாழவந்தான் கோட்டைக்கே சென்று வழங்கியுள்ளார். மேலும் சுடுகாட்டிற்கு என 20 சென்ட் நிலத்தையும் அளந்து கல்நட்டுள்ளனர். தற்போது குடிமனைப்பட்டா வழங்கிய இடம் முட் புதர்களால் சூழ்ந்துள்ளதால், எந்த இடம் யாருக்கு என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அந்த இடங்களை சுத்தம் செய்து, ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட இடத்தில் அளவீடு செய்து நிலம் ஒப்படைக்க வேண்டும், பசுமை வீடுகள் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவேண்டும், மற்றும் ஒரே குடிசை வீட்டில் 6 குறவன் இன குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு தனித்தனியாக குடிமனை பட்டாக்கள் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ்அரசு, ஒன்றிய செயலாளர் முருகன், வழக்கறிஞர் சுதாகர், சிஐடியு நிர்வாகி முரளி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை நிர்வாகிகள் ரவணையா, செல்லம்மாள், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே இருளர் இன மக்களுக்கு பட்டா: போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Uthukkottai ,Vazavanthankot ,Oothukottai District Collector ,
× RELATED ஏரியில் அளவுக்கதிகமாக மண் எடுப்பதை கண்டித்து போராட்டம்