×

கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப் சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு: இன்று விசாரணை

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மெரினா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்தும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையும் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

அந்த மனுவில், மீன் கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை கோரியுள்ளது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, லூப் சாலையின் கிழக்கு பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சாலை பயன்படுத்துவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வு நாளை (இன்று) விசாரிக்கும் வகையில் பட்டியலிட வேண்டும் என்று பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

The post கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப் சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு: இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : ICourt suo ,Kalangaraivilakkam ,Pattinpakkam ,Chennai ,Chennai Kalankarai ,
× RELATED பட்டினப்பாக்கம் முகத்துவாரத்தில் ஆண் சடலம் மீட்பு