×

திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை: சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதுதொடர்பாக, 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி என்ற பெயரில் பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் உதவி நடன கலைஞர்களான சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், கல்லூரி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்காததால் மாணவிகள், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் வந்து மாணவிகளிடம் பொது வெளியில் விசாரணை நடத்தினார். அப்போது, பேராசிரியர்கள் உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மாணவிகளின் கோரிக்கையை தேசிய மகளிர் ஆணைய தலைவர் உதாசீனப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 4 பேரை கைது செய்ய கோரி கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். இதையடுத்து கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஹரிபத்மன் மாதவரம் பகுதியை சேர்ந்த பெண் தோழி ஒருவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பாலியல் தொல்லை குறித்த புகாரை தேர்வு முடிவதற்கு முன்பாக விரைந்து முடிக்க கோரி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று கலாஷேத்ரா கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திருவான்மியூர் உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அறிவித்தபடி நேற்று காலை இந்த 3 சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவான்மியூர் எல்.பி. சாலையில் இருந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பேரணியாக கலாஷேத்ரா நோக்கி வந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் சுகந்தி கூறுகையில், ‘‘புகார் கொடுத்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் தனித்தனியாக அழைத்து மிரட்டியது கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர், மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை என்ற பெயரில் மிரட்டி வருகின்றனர். தற்போது கல்லூரியில் தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வு முடிவதற்கு முன்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது appeared first on Dinakaran.

Tags : Mathar Sangha ,Student Association of India Democratic Volleyber Association ,Thiruvanmyur Calashetra College ,Chennai ,Madar Association ,Student Association of India ,Democratic Volleyperson Association ,Mathar Association ,
× RELATED கள்ளக்குறிச்சி பள்ளி மாணவிக்கு நீதி...