×

இந்தாண்டு வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு 87% வருவாய் ஈட்டப்பட்டுள்ளது: அமைச்சர் மூர்த்தி பேச்சு

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை மூலமாக இந்தாண்டு தமிழ்நாடு அரசுக்கு 87% வரை வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிலுரையில் பேசியதாவது: தமிழ்நாடு அரசிற்கு வரி வருவாயில் 73% வணிகவரித் துறை மூலமாகவும், 14% பதிவுத்துறை மூலமாகவும் பெறப்படுகிறது. இவ்வகையில் அரசிற்கு வரும் வருவாயில் 87% எங்களின் துறைகளின் மூலமாகவே கிடைத்து வருகிறது. அதன்படி, 2021-22ம் நிதியாண்டில் ரூ. 1,04,970 கோடி வருவாய் உயர்ந்தது. 2022-23ம் நிதியாண்டில் ரூ.1,33,540 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நடப்பு ஆண்டின் வளர்ச்சி 27.22 சதவிகிதமாக உள்ளது.

அதேபோல, ரூ.10,643 கோடி ரூபாயாக இருந்த பத்திரப்பதிவுத் துறையின் வருவாய், 2021-22ம் நிதியாண்டில் ரூ.13,913 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2022-23ம் நிதியாண்டில் ரூ.17 ஆயிரத்து 296 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், 2022-23ம் ஆண்டில் வணிகவரி துறையும் பதிவுத் துறையும் சேர்ந்து ஈட்டியுள்ள மொத்த வருவாய் ரூ.1,50,836 கோடி ஆகும். இது கடந்த ஆண்டின் வருவாயை விட ரூ.31,953 கோடி ரூபாய் அதிகம் ஆகும். அதேபோல, இந்த இரண்டு ஆண்டுகளில் வணிகவரித் துறை மூலம் கூடுதலாக ரூ.37,331 கோடியும், பதிவுத் துறை மூலம் கூடுதலாக ரூ.6,653 கோடியும் என மொத்தம் ரூ.43 ஆயிரத்து 984 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டியுள்ளோம்.

இத்துறையின் நிர்வாக செலவினத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியானது, 2021-22ம் ஆண்டில் மொத்த வருவாயில் 0.40 சதவிகித்தில் இருந்தது. தற்போது 2022-23ம் ஆண்டில் 0.36 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2022-23ம் ஆண்டில் ரூ.5 கோடிக்கு மேலாக வரி ஏய்ப்பு செய்யும் வகையில் போலிப் பட்டியல்கள் தயாரித்த மூன்று நபர்கள் கண்டறியப்பட்டு, துறையால் பரிந்துரைக்கப்பட்டு, அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவின் போது ஆதார் தரவுடன் சொத்தை விற்பவர் மற்றும் வாங்குபவரின் விரல் ரேகையை ஒப்பிட்டு சரிபார்ப்பதால் ஆள்மாறாட்டப் பதிவுகள் தவிர்க்கப்படுகின்றன. விரல் ரேகை சரிவர பொருந்தாத இனங்களில், கண்ணின் கருவிழிப்படலம் ஆதார் தரவுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படுகிறது. அதேபோல, வயதானவர்களின் நலனை கருத்தில் கொண்டு, எழுதிக்கொடுப்பவர்கள் அல்லது எழுதி வாங்குபவர்களில் யாராவது ஒருவர் 70 வயதைக் கடந்தவராக இருப்பின், அவர்கள் ஆவணப்பதிவிற்காக சார்பதிவாளர் அலுவலகம் வரும்போது டோக்கன் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக ஆவணப்பதிவு செய்யும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மங்களகரமானவை என கருதப்படும் நாட்களில் பத்திரப்பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களுக்காகவும், அவசரமாக பத்திரப்பதிவு செய்ய விரும்புவோருக்காகவும், பதிவுத்துறையில் தட்கல் டோக்கன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக ஆவணம் பதிவு செய்ய விரும்புவோர் ரூ.5000 செலுத்தி தட்கல் டோக்கனை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வசதியானது கடந்தாண்டு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பதிவு அலுவலர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் கூடுதல் இணையதள சேவைகளை வழங்குவதற்காக புதிய மென்பொருள் ரூ.325 கோடி செலவில் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்தாண்டு வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு 87% வருவாய் ஈட்டப்பட்டுள்ளது: அமைச்சர் மூர்த்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Commercial Tax and Registration Department ,Minister Murthy ,Chennai ,Minister ,Murthy ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...