×

காங்கிரஸ் 166 வேட்பாளர்களை அறிவித்த பின்னும் கர்நாடகா பாஜ பட்டியல் தாமதம்: பிரதமர் மோடி ஆலோசித்த பிறகும் இழுபறி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 2 பட்டியல் வெளியிட்ட பிறகும் பா.ஜ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடும் 166 தொகுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 58 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மட்டுமே பாக்கியுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் முதல் கட்டமாக 93 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள், ஆம்ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.

இதனிடையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்னும் ஒரு வேட்பாளர் பெயர் கூட அறிவிக்கப்படவில்லை. கடந்த 1ம் தேதி முதல் தற்போது வரை வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்னும் பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுக்காமல் தவித்து வருகிறார்கள். டெல்லியில் நேற்று காலை தொடங்கி மாலை வரை பல கட்டங்களாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்பட நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆனாலும் வேட்பாளர் பட்டியல் முடிவாகவில்லை.

தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி குஜராத் தேர்தலில் பின்பற்றிய நடைமுறையை சுட்டிக்காட்டி ஆலோசனை வழங்கியுள்ளார். இதையடுத்து 140 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டுமே கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வில் பெறும் இழுபறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள 120 எம்எல்ஏக்களில் 32 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிகிறது.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று காலை செய்தியாளர்களிடம் முதல்வர் பசவராஜ்பொம்மை கூறும்போது, பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் தேர்தலில் தற்போதுள்ள எம்எல்ஏக்களில் சிலருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காமல் தவிர்ப்பதுடன் அந்த தொகுதிகளில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் யோசனையில் கட்சி தலைமை உள்ளது. கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்று செயல்படுவோம்’ என்றார். உடனிருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறும்போது,பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் எந்த சிக்கலுமில்லை. 170 முதல் 180 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயாராகவுள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்படும்’ என்றார்.

  • சொந்த தொகுதியில் பொம்மை மீண்டும் போட்டி
    கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹாவேரி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ஷிங்கானில் மீண்டும் போட்டியிடுகிறார். இங்கு இவர் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிவமொக்கா மாவட்டம் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இது எடியூரப்பாவின் சொந்த தொகுதியாகும். அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டதால் அவரது மகன் போட்டியிடுகிறார்.

The post காங்கிரஸ் 166 வேட்பாளர்களை அறிவித்த பின்னும் கர்நாடகா பாஜ பட்டியல் தாமதம்: பிரதமர் மோடி ஆலோசித்த பிறகும் இழுபறி appeared first on Dinakaran.

Tags : Congress ,PM Modi ,Bengaluru ,Karnataka ,Legislative Assembly Elections ,Modi ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி