×

டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு: அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி.! சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அதிரடி

புதுடெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. ராணுவத்தின் முப்படைகளுக்கும் தற்காலிக அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள், 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்ற முடியும். இவர்களில் 25 சதவீதம் பேர் அவர்களின் தகுதியின் அடிப்படையில் நிரந்தர பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்கள், ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியாது. இந்த திட்டத்தின் கீழ் 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர், வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இவர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்தப் பணியில், பணி நிரந்தரம் இல்லை, ஓய்வூதியம் இல்லை என்பதால், இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்தத் திட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சத்தீஸ் சந்திர ஷர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், நாட்டின் நலன் கருதி இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிறது என்றும், இந்த திட்டம் அரசியல் சாசனப்படி செல்லும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மனுதாரர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்கள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த அமர்வு, இன்று பிறப்பித்த உத்தரவில், ‘அக்னிபாத் திட்டம் ஒன்றிய அரசின் கொள்கை முடிவு சம்பந்தமானது. விண்ணப்பதாரர்கள் எவரும் முறையிடவில்லை. டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்துள்ளது. எனவே டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

The post டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு: அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி.! சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அதிரடி appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Supremcourt ,New Delhi ,Supreme Court ,Chief Justice ,Dinakaran ,
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...