×

ரூ.20 கோடியில் 12 புதிய தீயணைப்பு நிலையங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தலைமை செயலகத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 20 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 12 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் மற்றும் 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 10 மீட்பு இழுவை வாகனங்கள் மற்றும் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4 கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையானது ‘காக்கும் பணி எங்கள் பணி’ என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவு ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் போன்றவைகளிலிருந்தும், பிற அழிவுகளிலிருந்தும் மக்களை காப்பதும், அவசர உதவி புரிவதும் இத்துறையின் முக்கிய பணியாகும்.

இத்துறையின் செயல்திறனை மேம்படுத்திட புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் அமைத்தல், பணியாளர்களுக்கு குடியிருப்புகளை கட்டுதல், புதிய வாகனங்களை கொள்முதல் செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, திருச்சி மாவட்டம் வையம்பட்டி, கடலூர் மாவட்டம் குமராட்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம், விழுப்புரம் மாவட்டம் அன்னியூர், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை, சென்னை மாவட்டம் கொளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கம், திருவண்ணாமலை கண்ணமங்கலம் ஆகிய 12 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களை தரம் உயர்த்தி, மொத்தம் 20 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திட்டங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

சென்னை காவல் துறையின் பயன்பாட்டில் இருந்து வரும் கடற்கரை ரோந்து வாகனங்கள் பழுதடைந்துள்ளதால், அவற்றிற்கு மாற்றாக புதிய கடற்கரை ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 10 மீட்பு இழுவை வாகனங்கள் மற்றும் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4 கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்துள்ளார். மேலும், சாலை பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக சென்னை காவல் துறைக்கு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக 5 புதிய நான்கு சக்கர மீட்பு இழுவை வாகனங்களும், 5 புதிய இருசக்கர மீட்பு இழுவை வாகனங்களும் என மொத்தம் 10 மீட்பு இழுவை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை காவல் துறையினரின் கடற்கரை ரோந்து மற்றும் சுற்றுக்காவல் பணிக்காக கடற்கரை ரோந்து வாகனங்கள் வாயிலாக மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகிய இடங்களில் பாதுகாப்பு ரோந்து மற்றும் குற்றச் சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுப்பதற்காக பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணி செய்து வருகின்றனர். இவ்வாகனங்கள் அந்தந்த காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கடற்கரை ரோந்துப் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்காக 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய கடற்கரை ரோந்து வாகனங்கள் சென்னை காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 3 வாகனங்கள் சுற்றுக் காவல் பணிக்கும், ஒரு வாகனம் சுற்றுக் காவல் மற்றும் கடல் அலைகளில் சிக்கிக்கொண்டவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு துரிதமாக சிகிச்சைக்கு கொண்டு செல்லக் கூடிய பணிக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மணல் பரப்பில் வேகமாக செல்லும் வகையில் 4 சக்கர இயக்கியால் இயங்கக்கூடியது ஆகும். ஒலிபெருக்கி வசதியுடன் இவ்வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குற்றச்செயல்கள் நடவாமல் தடுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குற்றவாளிகள் யாரேனும் கூட்டத்தில் இருந்தால் எப்ஆர்எஸ் செயலி மூலம் அவர்களை கண்டறிந்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பண்டிகை தினங்களில் கடற்கரையில் அதிகப்படியான கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் விழிப்புடன் சுற்றுக்காவல் பணி மேற்கொள்ளவும் இவை உதவிகரமாக இருக்கும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், , தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.20 கோடியில் 12 புதிய தீயணைப்பு நிலையங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief President B.C. ,G.K. Stalin ,Chennai ,Chief Secretariat ,Chief Secretary of State ,G.K. Stalin Fire and Rescuers Department ,Chief President B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...