×

ஒருத்தரா இருந்தாலும் உண்மையா இருக்கணும்!

நன்றி குங்குமம் தோழி

‘அருவி’ புகழ் ஜோவிதா லிவிங்ஸ்டன்

‘‘நண்பர்கள் எனக்கு அதிகம் கிடையாது. குறிப்பிட்டு சொல்லணும்னா எனக்குன்னு மனசுக்கு நெருக்கமான இரண்டு ஃப்ரண்ட்ஸ்தான் இருப்பாங்க. ஆனால், அவங்க எனக்கு ஒரு பிரச்னைன்னா எனக்காக வந்து நிப்பாங்க. அதுதான் உண்மையான நட்பு. நிறைய பேர் இல்லை என்கிற வருத்தம் எனக்கு இவங்க கொடுத்தது இல்லை’’ என்கிறார் ஜோவிதா லிவிங்ஸ்டன். சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அருவி’ தொடரின் கதாநாயகிதான் ஜோவிதா. இவருடைய தந்தை லிவிங்ஸ்டன் வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி, வில்லன் என அனைத்து கதாபாத்திரத்திலும் தனக்கென்று ஒரு பாணியினைக் கொண்டவர். அவரைப் போலவே ஜோவிதாவும் சின்னத்திரையில் தனக்கான அடையாளத்தினை பதித்து வருகிறார்.

‘‘அப்பா சினிமாத் துறையில் இருந்ததாலோ என்னவோ… எனக்கும் என் தங்கைக்கும் சினிமா வாசனையே வேண்டாம் என்பதில் உறுதியா இருந்தார். எங்க வீட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். குறிப்பா அப்பா. நான் நடிக்க வந்த பிறகுதான் வெளியவே போகிறேன்னு சொல்லணும். சின்ன வயசில் ஏன் கல்லூரியில் படிக்கும் போது கூட நான் வெளியே போனதே இல்லை. மாலை ஆறு மணிக்கு மேல வீட்டை விட்டு வெளியே போகக்கூடாதுன்னு எங்க வீட்டில் ரூல்ஸ் இருக்கு. அதனால நானும் என் தங்கையும் எப்பவுமே வீட்டில்தான் இருப்போம். நானாவது வெளியே போகணும்னு ஆசைப்படுவேன். என் தங்கைக்கு சுத்தமா அதில் விருப்பம் இருக்காது. இப்ப நான் அவளை வெளியே மாலுக்கு போகலாம்னு கூப்பிட்டாலும் வரமாட்டா. ரொம்ப வற்புறுத்தி தான் கூட்டிக் கொண்டு போவேன்’’ என்றவர் நடிப்பு துறைக்கு வந்தது பற்றி விவரித்தார்.

‘‘எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. ஏதாவது ஒரு வாய்ப்பு வந்தா, அதை செய்து பார்க்கலாம்னு தோணும். அப்படித்தான் நான் +2 படிக்கும் போது குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதற்கு காரணம் என் அப்பாதான். என்னடா அப்பாக்கு நடிக்கவே பிடிக்காதுன்னு சொல்லிட்டு இப்ப நடிக்க காரணம் அப்பான்னு சொல்றேன்னு பார்க்கிறீங்களா..? அது ஒரு சின்ன பிளாஷ்பேக். ஒரு டாக்குமென்ட்ரி பிராஜக்ட்காக அப்பாவ நடிக்க சொல்லி கேட்டாங்க. அப்பாவிடம் அது குறித்து பேச வீட்டிற்கு வந்தவங்க, என்னைப் பார்த்து நீங்களும் இதில் உங்க அப்பாவிற்கு மகளா நடிக்கலாமேன்னு சொல்ல…? எனக்கும் நடிச்சுதான் பார்க்கலாமேன்னு எண்ணம் ஏற்பட்டது.

அப்ப எனக்கு நடிப்புன்னா என்னென்னே தெரியாது. வீட்டை விட்டு வெளியே போனதில்லை. சரி தோல்வியோ வெற்றியோ டிரை செய்யலாம்னு நினைச்சேன். அப்பாவிடம் என் விருப்பத்தை முதலில் சொன்ன போது அவருக்கு அது பிடிக்கல. அதன் பிறகு டிரை செய்றேன். சரியா வந்தா ஓ.கே. இல்லைன்னா வேணாம்னு சொன்னேன். அதன் பிறகுதான் அப்பா நான் நடிக்க சரின்னு சம்மதிச்சார். அந்த குறும்படத்தில் நடிச்சு கொடுத்தேன். அது எனக்குள் ஒரு நம்பிக்கையை கொடுத்துச்சு. என்னாலும் நடிக்க முடியும்னு தைரியத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு பூவே உனக்காக சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

சின்னத்திரை என்பதால், அப்பாவும் சரின்னு சொல்ல அப்படித்தான் நான் சின்னத்திரை நாயகியானேன். அந்த சீரியல் நல்லா போச்சு. அதனை தொடர்ந்து இப்ப அருவியில் நடிக்கிறேன். இந்த சீரியல் நல்லா சக்சஸாகவே போகுது’’ என்றவர் தன் குடும்பம் பற்றி பேசினார்…

‘‘என்னுடைய குடும்பம் ரொம்ப சின்னது. அப்பா, அம்மா, நான், தங்கச்சின்னு நாங்க நாலு பேர். இதுதான் என் உலகம்னு கூட சொல்லலாம். அம்மா டீச்சரா வேலை பார்த்தாங்க. அதனால அப்பாவிற்கு என்னையும் டீச்சராக்கணும்னு விருப்பம். எனக்கும் படிப்பிற்கும் ரொம்ப தூரம். அதற்காக படிக்க மாட்டேன்னு அர்த்தமில்லை. நான் ஆவ்ரேஜா படிப்பேன்.

மேலும் கல்லூரியில் வெளியே போகணும்… மேலும் லைட்டான பாடமா இருக்கணும்னு டிராவல் மேனேஜ்மென்ட் குறித்து படிச்சேன். காரணம், இதன் மூலம் வெளியே போகக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்னு விரும்பினேன். சின்ன வயசில் இருந்தே வீட்டில் மட்டுமே இருந்ததால், எனக்கு வெளியே போக வேண்டும்னு ரொம்ப ஆசை. மேலும் இந்த பயிற்சியிலும் கல்லூரியில் ஆசிரியர் என்ன சொல்றாங்களோ அதை கவனிச்சாலே போதும். என் தங்கை அப்படி இல்லை. ஆனா, ரொம்ப நல்லாவே படிப்பா.

இதுதான் என் சின்ன உலகம்.ஃப்ரண்ட்ஸ் பத்தி சொல்லணும்னா… நான் ஏற்கனவே சொன்னதுதான். அதிகம் ஃப்ரண்ட்ஸ் கிடையாது. அதற்காக நான் நல்லா பழகமாட்டேன்னு கிடையாது. எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகுவேன். ஆனால் மனசுக்கு ரொம்ப நெருக்கம்னு சொன்னா என் தங்கை மற்றும் கல்லூரியில் படிக்கும் போது நட்பு கொண்டாடிய ஸ்வேதா. நானும் அவளும் அடிக்கடி வெளியே போனதில்லை, இருந்தாலும் எனக்காக அவ எங்க வேண்டும்னாலும் வருவா. மனசுவிட்டு பேசியது இவகிட்ட தான். ஒருத்தரைப் பார்த்தவுடன் அவங்களிடம் மனசுவிட்டு பேசணும்னு தோணும். ஸ்வேதாவும் அப்படித்தான்.

நானும் ஸ்வேதாவும் கல்லூரியில்தான் பழக்கம். நானும் அவளும் ஒன்னா தமிழ் வகுப்பில் படிப்போம். அந்த சில மணி நேரத்திலேயே எங்க இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு ஏற்பட்டது. எனக்கு மனசு சங்கடமா இருந்தாலும் சந்தோஷமா இருந்தாலும் அவகிட்ட தான் ஷேர் செய்வேன். மனசுக்கு சந்தோஷமா இருக்கும். என்ன வேண்டுமானாலும் பேசலாம். நாம என்ன பேசினாலும் நம்மை ஜட்ஜ் செய்ய மாட்டாங்க. நம்மை அப்படியே ஏத்துப்பாங்க. என்ன பிரச்னைனாலும் அவளுக்குதான் போன் செய்வேன்.

கல்லூரியில் நானும் அவளும் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட். நான் ஏதாவது செய்து கிளாசுக்கு வெளியே வந்திடுவேன். அவ மட்டும் எப்படி உள்ள இருப்பா. அவளையும் வெளியே நிக்க வச்சிடுவேன். வெளியே போனதுன்னு பார்த்தால் கல்லூரிய பங்க் அடிச்சிட்டு போவோம். நான் அண்ணாநகரில் உள்ள பிரபல கல்லூரியில் படிச்சேன். அதனால் அங்குள்ள பிரபல மாலில் தான் நானும் அவளும் பாதி நாட்கள் சுற்றிக் கொண்டு இருப்போம். அப்புறம் அங்கிருக்கும் ஃபன் சிட்டியில் போய் விளையாடுவோம். இப்பகூட இது போன்ற விளையாடும் இடத்தைப் பார்த்தா, நானும் அவளும் எக்சைட்டாயிடுவோம்.

ஸ்வேதா கல்லூரி தோழி என்றால், வீட்டில் அம்மாவும், என் தங்கையும் தான் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ். அப்பா ஸ்ட்ரிக்ட் என்பதால், எல்லா விஷயமும் அவரிடம் ஷேர் செய்ய முடியாது. நான் நடிக்க ஆசைப்பட்ட போது அம்மாவிடம் சொல்லித்தான் அப்பாவிடம் பேச சொன்னேன். தங்கையும் அப்படித்தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தாலும் அவளிடம் சொல்லிடுவேன். அவ என்னை மாதிரி கலகலன்னு பேசமாட்டா. ஆனா, என்னை ரொம்ப நல்லா பார்த்துப்பா’’ என்றவர் இந்த குடும்பத்தை தாண்டி மற்றொரு குடும்பம் இருப்பதாக கூறினார்.

‘‘சின்னத்திரையில் என்னுடைய அறிமுகம் ‘பூவே உனக்காக’ தொடரில்தான். அந்த டீம் எனக்கு இன்னொரு குடும்பம் மாதிரி. அவங்கள நான் ரொம்பவே மிஸ் செய்றேன். அதில் அருண், ஷியாம், மாரி, ஆம்னி மேடம், சுபத்ரா, தேவிப்பிரியானு அந்த டீமில் இருக்கும் எல்லோருமே எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஷூட்டிங் தவிர்த்து நாங்க தனியா எங்கேயும் போனதில்லை. என்றாலும் மனசுக்கு ரொம்பவே நெருக்கமா இருப்போம். எனக்கு மேக்கப் எப்படி போடணும்னு தேவிப்பிரியா மற்றும் சுபத்ராதான் சொல்லிக் கொடுத்தாங்க. இப்பவும் அவங்க வெளிய போகலாம்னு கூப்பிடுவாங்க. நான் ஷூட்டிங்கில் பிசியா இருப்பதால் போக முடியறதில்லை.

இப்ப நடிக்கும் அருவி தொடரிலும் எனக்கு ரொம்ப பிடிச்ச செட். இயக்குநர் முதல் எனக்கு மாமனார், மாமியார் மற்றும் அப்பாவா நடிக்கும் அனைவரும் ரொம்ப பிடிக்கும். அதில் எனக்கு மாமனாரா நடிக்கும் கண்ணன் சாரும் நானும் ரொம்பக்ளோஸ். அவரிடம்தான் உரிமையா சண்டை போடுவேன். எனக்கும் அவருக்கும் மேக்கப் போட ஒரே அறைதான். நான் எத்தனை முறை மேக்கப் போட வந்தாலும் சைலன்டா வெளியே போயிடுவார்.

முதலில் என்னை இங்க அனுமதிக்கவே இல்லை. நான் இங்கதான் இருப்பேன்னு அவரிடம் சண்டை போட்டு இந்த அறையை ஆக்கிரமிச்சுக்கிட்டேன். இப்ப நான் இல்லைன்னா எங்க என் மருமகள காணோம்னு கேட்பார். அப்புறம் என் அப்பாவாக நடிக்கும் கிரிஷ் சார். சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் ஒரு மகளை போல் பார்த்துப்பார். அம்பிகா அம்மா. இவங்களையும் ரொம்ப பிடிக்கும். எனக்கு நிறைய அட்வைஸ் கொடுப்பாங்க. எப்படி நடிக்கணும், பேசணும், பழகணும்னு எல்லாம் சொல்லித் தருவாங்க. எனக்கு நிறைய கிஃப்ட் தருவாங்க. நான் சீரியலில் கட்டுற பாதி புடவை அவங்க கொடுத்ததுதான். புடவை மட்டுமில்லை லிப்ஸ்டிக்கும் நிறைய கொடுத்திருக்காங்க.

அவங்களுக்கு மசால் தோசைன்னா ரொம்ப பிடிக்கும். சில சமயம் ‘ராத்திரி வா போய் மசால் தோசை சாப்பிட்டு வரலாம்’னு கூட்டிக் கொண்டு போவாங்க. நானும் அவங்களும் சினிமா பார்த்திருக்கோம். அப்புறம் என் அம்மாவா நடிக்கும் ஜீவிதா அக்கா. அவங்க இப்பதான் வந்தாங்க, இருந்தாலும் மனசுக்கு ரொம்ப நெருக்கமாயிட்டாங்க,
அருவி ஷூட்டிங்கிற்காக நாங்க ஏற்காடு போயிருந்தோம், என் கூட அம்மா வந்தாலும் முதல் முறையா நான் என் குடும்பத்தை விட்டு வெளியூர் போனது அது தான் முதல் முறை. காலை ஆறு மணி முதல் இரவு 11 மணி வரை ஷூட்டிங் தொடர்ந்து இருக்கும். அதனால் வெளியே எங்கேயும் போக முடியல. ஆனாலும் எல்லாரும் சேர்ந்து இருந்தது ரொம்பவே ஜாலியா இருந்தது. அந்த ஷூட்டிங் ஸ்பாட் ரொம்பவே நல்லா இருந்தது.

எனக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இல்லைதான். ஆனால், கடவுள் புண்ணியத்தில் எனக்கு இருக்கும் அந்த இரண்டு நபர்களும் ரொம்பவே நம்பிக்கையானவங்க. கூட்டமா இருப்பதைவிட இரண்டு பேர் ஒருத்தருக்காக ஒருத்தர் இருந்தாலுமே சந்தோஷம்தான். இப்படி ஃப்ரண்ட்ஸ் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்’’ என்றார் ஜோவிதா.

தொகுப்பு : ப்ரியா

The post ஒருத்தரா இருந்தாலும் உண்மையா இருக்கணும்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Jovita Livingston ,Dinakaran ,
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!