×

செம்பனார்கோயில் பகுதியில் கோடை சாகுபடியாக பருத்தி விதைப்பு தீவிரம்

செம்பனார்கோயில் : மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான், வடகரை, திருக்கடையூர், சங்கரன்பந்தல், பொறையாறு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், சம்பா அறுவடையை முடித்த பின்னர் பருத்தி சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆக்கூர், உமையாள்புரம், காளகஸ்திநாதபுரம், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வயலில் பருத்தி செடியை சுற்றி மண்ணை தேக்கும் பணி நடைபெற்றது. இதுகுறித்து பணியில் ஈடுபட்ட உமையாள்புரம் பகுதி விவசாய கூலித் தொழிலாளி கூறுகையில், கோடை காலத்திற்கு ஏற்ற பயிராக பருத்தி உள்ளது. இதனால் சம்பா அறுவடை பணியை முடித்த பின்னர் தை, மாசி, பங்குனி போன்ற மாதங்களில் பருத்தி சாகுபடி பணியை மேற்கொண்டு வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கு பருத்தி சாகுபடி செய்யப்பட்டது.

பருத்தி 3 மாதம் சாகுபடி காலமாகவும், 3 மாதம் மகசூல் தரும் காலமாகவும் உள்ளது. தற்போது பருத்தி செடியின் அடிப்பகுதியில் பொட்டாஸ், அடிஉரம், யூரியா போன்றவை செலுத்தி கைவண்டி உதவியுடன் மண்ணை சுற்றி தேக்கும் பணி (பார் அணைக்கும் பணி) நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் பூச்சி தாக்குதலில் இருந்து பருத்தி செடியை பாதுகாக்க மேல்மருந்து தெளிப்போம். இன்னும் சில வாரங்களில் பருத்திச் செடி வளர்ந்து பூ பூத்து பிஞ்சு விட்டு, மகசூல் தரும் நிலையில் இருக்கும். மற்ற பயிர்களை விட பருத்தி சாகுபடியில் முழுமையாக பாடுபட்டால் நல்ல லாபம் கிடைக்கும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post செம்பனார்கோயில் பகுதியில் கோடை சாகுபடியாக பருத்தி விதைப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Sembanarkoil ,Mayiladuthurai district ,Arupadi ,Parasalur ,Kalakastinathapuram ,Madappuram ,Akur ,Mudikandanallur ,Melapadi ,Thiruchampalli ,Karuvazhakarai ,Ganjanagaram ,
× RELATED செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில்...