×

வெற்றியின் வேகத்தை முன்னெடுக்க விரும்புகிறோம்: கேப்டன் மார்க்ரம் நம்பிக்கை

ஐதராபாத்: 10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 14வதுலீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் நாட்அவுட்டாக 99 ரன் ( 12 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். சாம்கரன் 22 ரன் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். சன்ரைசர்ஸ் பவுலிங்கில் மயங்க் மார்கண்டே 4, உம்ரன் மாலிக், மார்கோ ஜான்சன் தலா 2விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் ஹாரி புரூக் 13, மயங்க் அகர்வால் 21 ரன்னில் வெளியேற ராகுல் திரிபாதி அதிரடியாக 48 பந்தில் 10 பவுண்டரி,3 சிக்சருடன் 74 ரன் எடுத்தார். அவருடன் கேப்டன் எய்டன் மார்க்ரம் 37 ரன் (21 பந்து, 6பவுண்டரி) எடுத்து நாட்அவுட்டாக களத்தில் இருந்தார்.

17.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 145ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அபார வெற்றிபெற்றது. 3வது போட்டியில் அந்த அணிக்கு இது முதல் வெற்றியாகும். முதல் 2 போட்டியிலும் வென்ற பஞ்சாப் முதல் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் கேப்டன் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் கூறியதாவது: தொடக்கத்தில் எங்களுக்கு சற்று கடினமாக இருந்தாலும் இன்று வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதாக நான் நம்புகிறேன். அவர்கள் அதை இன்றிரவு (நேற்றிரவு) நிரூபித்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் வெற்றி பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாம் எவ்வாறு சிறந்து விளங்கலாம் என்பதைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. வீரர்களின் விருப்பங்களை ஆதரிக்க நாங்கள் தொடர்ந்து ஊக்குவிப்போம், அதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்குகிறோம். அடில் ரஷீத்துக்கு பதிலாக மார்கண்டேவை ஆட வைத்தது ஒரு நல்ல நடவடிக்கை அல்ல, ஆனால் இன்றிரவு அவரின் செயல்பாட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் நன்றாக பந்து வீசினார். இது அவருக்கு ஒரு பெரிய போட்டியின் தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். திரிபாதியின் திறமையை நாம் அனைவரும் அறிவோம், இன்றிரவு அவர் அதை மீண்டும் ஒருமுறை காட்டினார். அவருக்கு ஹாட்ஸ் ஆஃப். அவருடன் எதிர்முனையில் நின்று ஆடுவது எளிதானது. இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. இதில் இருந்து முன்னோக்கிச் செல்ல சில வேகத்தை எடுக்க முடியும் என்று நம்புகிறேன், என்றார். 4 விக்கெட் வீழ்த்திய மயங்க் மார்கண்டே கூறுகையில், வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதே எனது பணி. நான் மெதுவாக பந்துவீசி, அதிர்ஷ்டவசமாக விக்கெட்டுகளைப் பெற்றேன். அடில் ரஷீத் உடனான பேச்சு எனக்கு உதவியது. இந்த செயல்திறனை நான் மிகவும் உயர்வாக மதிப்பிடுகிறேன், வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சி, என்றார். அடுத்ததாக சன்ரைசர்ஸ் வரும் 14ம் தேதி கேகேஆர் அணியுடனும், பஞ்சாப் 13ம் தேதி குஜராத் அணியுடனும் மோத உள்ளன.

The post வெற்றியின் வேகத்தை முன்னெடுக்க விரும்புகிறோம்: கேப்டன் மார்க்ரம் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Markram ,Hyderabad ,16th IPL series ,Sunrisers ,Punjab ,Markram Hope ,Dinakaran ,
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...