×

ரெட்டேரியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புழல்: புழலில், ரெட்டேரியை சீரமைத்து குடிநீரை பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர். சென்னை புழல் அடுத்த ரெட்டேரியின் ஒரு பகுதி புழல் எம்ஜிஆர் நகரிலும், மற்றொரு பகுதி லட்சுமிபுரத்திலும் உள்ளது. இதன் நடுவே, சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 600 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்தது. இந்த ஏரி நாளடைவில் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள், வீடுகள் கட்டப்பட்டு தற்போது சிறிய அளவிலே காணப்படுகிறது. லட்சுமிபுரம், விநாயகபுரம், கல்பாளையம், பரிமளா நகர், மதுரா மேட்டுப்பாளையம், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் சென்னை மாநகரிலிருந்து எடுத்துச் செல்லப்படும் குப்பைக் கழிவு பொருட்களும் ரெட்டேரியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

ரெட்டேரி மீன் மார்க்கெட் பகுதியில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் விற்கப்படும் மீன் மற்றும் இறைச்சிகளின் கழிவுகள் ஏரியிலேயே கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரும் மாசுபட்டு வருகிறது. இந்த ஏரியின் லட்சுமிபுரம், செங்குன்றம், செம்பியம் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் ஏரிக்கரை இல்லாததால் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் தொடர் கதையாக உள்ளது. இந்த ஏரியில் பல இடங்களில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்து காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் வறட்சி ஏற்பட்டபோது ரெட்டேரியிலிருந்து குடிநீர் சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் ரெட்டேரி தண்ணீரை பயன்படுத்தினர். இந்தப் பகுதியை சுற்றியுள்ள லட்சுமிபுரம் டீச்சர்ஸ் காலனி, கடப்பா சாலை, புத்தகரம், கல்பாளையம், விநாயகபுரம், புழல், எம்ஜிஆர் நகர், மதுரா மேட்டுப்பாளையம், கதிர்வேடு உள்பட பல்வேறு நகர் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பல்வேறு சமூக அமைப்புகள் சம்பந்தப்பட்ட செங்குன்றம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் அவ்வப்போது கண் துடைப்புக்காக வந்து சுத்தம் செய்வது போல் செய்து வந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் கோடிக்கணக்கில் நிதி செலவிடப்பட்டு ஏரி சீரமைக்கப்படும் என அறிவித்த நிலையில், எந்த வகை பணியும் சரிவர நடக்கவில்லை. ‘‘இரட்டை ஏரியை பொதுப்பணித்துறை மேற்பார்வையில், வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றி, கழிவுநீர் மற்றும் குப்பைகளை ஏரியில் கலப்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரைப்பகுதிகளை அமைக்க வேண்டும். சென்னை கோவளத்தில் உள்ளது போல் படகு குழாம் அமைத்து சுற்றுலாத்தலமாக மாற்றினால் சென்னை மற்றும் அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாகவும், அரசுக்கு வருமானமும் கிடைக்கும். ஏரியை சுற்றி நடைப்பயிற்சி பாதை அமைக்க வேண்டும்.’’ என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: ‘‘ஏரியை பாதுகாக்கவும், இங்கிருந்து குடிநீரை சென்னை மக்களுக்கு வழங்கவும் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியை கொண்டு ரெட்டேரியை பாதுகாத்திட வேண்டும். அவ்வாறு பாதுகாத்தால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர் பாதுகாப்பாகவும் இருக்கும். இதை உடனடியாக செய்ய வேண்டும்.’’ என கூறினார்.

The post ரெட்டேரியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rederi ,Puzhal ,Chennai Puzhal ,Rederi… ,
× RELATED சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!!