×

கிருமாம்பாக்கத்தில் பரபரப்பு ரசாயன டேங்கரை நிலத்தில் புதைக்க எதிர்த்து இளைஞர்கள் உண்ணாவிரதம்

பாகூர், ஏப். 10: கிருமாம்பாக்கம் அருகே தனியார் கம்பெனிக்கு வந்த ரசாயன டேங்கரை நிலத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த வார்க்கால் ஓடை கிராமத்தில் தனியார் கொசுவர்த்தி தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. அங்கு கொசுவர்த்தி சுருள் மற்றும் கொசு ஒழிப்பு ரசாயனம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கம்பெனிக்கு புதிதாக ராட்சத கெமிக்கல் டேங்க் ஒன்று கண்டெய்னர் லாரியில் நேற்று முன்தினம் மாலை வந்தது. இந்த ரசாயன டேங்க்கை நிலத்துக்கு அடியில் புதைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், பல்வேறு தீங்கு ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதனால் அப்பகுதி இளைஞர்கள் திரண்டு வந்து டேங்க் ஏற்றி வந்த லாரியை நேற்று முன்தினம் இரவு சிறைபிடித்தனர். ஏற்கனவே 3க்கும் மேற்பட்ட டேங்குகள் புதைக்கப்பட்டு உள்ளதால் கிராமத்தில் பாதிப்புகள் உள்ளது. இந்த டேங்க்கும் புதைத்தால் மேலும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த வாகனம் கடலூர்- புதுச்சேரி ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரசாயன டேங்கரை நிலத்தில் புதைக்க கிராம இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2வது நாளாக போராட்டத்தில் குதித்தனர்.

புதுவை- கடலூர் சாலையில் உண்ணாவிரதம் இருந்தனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, கம்பெனி நிர்வாகத்துடன் ஊர் முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தைக்கு போலீசார் ஏற்பாடு செய்தனர். பாய்லர் டேங்கை நிலத்தில் புதைப்பதால் நிலத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என மண்பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை மக்கள் மத்தியில் காண்பிக்க வேண்டும் என கிராம மக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனை நிர்வாகம் தரப்பில் ஏற்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மதியம் 1.30 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை இளைஞர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post கிருமாம்பாக்கத்தில் பரபரப்பு ரசாயன டேங்கரை நிலத்தில் புதைக்க எதிர்த்து இளைஞர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Kurambakkam ,Bagur ,Krimambakkam ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்