×

மன்னார்புரம் வழியாக மத்திய பஸ்நிலையம் வரும் அரிஸ்டோ மேம்பால சாலை அடுத்த வாரம் திறக்கப்படும்

திருச்சி: திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் மன்னார்புரம் வழித்தடம் அடுத்தவாரம் திறப்பு விழா நடைபெறும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நிகழ்ச்சியில், கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அதிகளவில் நிதி வேண்டும், ஒன்றிய அரசு உதவ வேண்டுமென பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆளுநரின் பேச்சுக்கு அறிக்கை வாயிலாக முதல்வர் பதில் அளித்து விட்டார். ஆளுநர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமென நேரடியாகவே முதல்வர் தெரிவித்து விட்டார். திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரத்தில் இருந்து மத்திய பஸ் நிலையம் வர பயன்படும் பாலம் அடுத்த வாரம் திறக்கப்படும். இன்று (நேற்று) காலை முதுநிலை பொறியாளர் வந்திருந்தார். மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கை தயாரன பின், பால்பண்ணை முதல் துவாக்குடி வரை எக்ஸ்பிரஸ் ஹை எலிவேட்டர் சாலை பணிகள் தொடங்கப்படும். திட்ட அனுமதிக்காக காத்திருக்கிறோம். திருச்சியில் ரூ.600 கோடிக்கு டைட்டல் பார்க்கை முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை கொடுக்க உள்ளோம். டைட்டல் பார்க் போன்ற எண்ணற்ற திட்டங்கள் வர உள்ளதால் திருவெறும்பூர்- அசூர் வரை அரைஅடி இடம் கூட வாங்க முடியாத அளவுக்கு திருச்சி டெவலப்பாக உள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். வருங்காலத்தில் திருச்சி முக்கியமான பகுதியாக (ஹப்) மாற உள்ளது என்றார்.

The post மன்னார்புரம் வழியாக மத்திய பஸ்நிலையம் வரும் அரிஸ்டோ மேம்பால சாலை அடுத்த வாரம் திறக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Central Bus Station ,Mannarpuram ,Trichy ,Minister ,KN Nehru ,Trichy… ,Dinakaran ,
× RELATED திருச்சியில் ஓடும் பேருந்தில்...