×

தொடர் விடுமுறை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

உடுமலை, ஏப். 10: தொடர் விடுமுறை மற்றும் கடும் வெயில் காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம், திருமூர்த்தி அணை ஆகியவை உள்ளன. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

தற்போது, கோடை துவங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும் நடந்து முடிந்துள்ளது. மேலும் புனிதவெள்ளி,ஈஸ்டர் என 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதையடுத்து, சுற்றுலா தலங்களை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கிவிட்டனர். குறிப்பாக, அருவி, ஆறு, குளம் உள்ள பகுதிகளுக்கு அதிகளவில் செல்கின்றனர்.

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. வெயிலுக்கு இதமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். உள்ளுர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து அருவியில் குளிக்கின்றனர். இதேபோல், அமராவதி ஆறு பகுதிக்கும் ஏராளமானோர் செல்கின்றனர். ஆற்றில் தற்போது தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டாலும், ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குமரலிங்கம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தேங்கிய தண்ணீரில் உள்ளுர் மக்கள் நீராடி செல்கின்றனர்.

The post தொடர் விடுமுறை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Panchalinga Falls ,Udumalai ,Tirumurthimalai Panchalinga ,Panchalinga waterfall ,
× RELATED ஒப்பந்த கூலி வழங்க வலியுறுத்தல்...