×

வெறும் டாடா மட்டும் காட்டி விட்டு பறந்தார் எடப்பாடி, ஓபிஎஸ் மீது மோடி கடும் அதிருப்தி: பிரதமரை வரவேற்க அண்ணாமலை சென்னை வராதது ஏன்? பரபரப்பு தகவல்கள்

சென்னை: அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மீது பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் இருந்து வருவது அவரது சென்னை பயணத்தில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதே நேரத்தில் பிரதமரை வரவேற்க அண்ணாமலை சென்னை வராதது ஏன் என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக எடப்பாடி, ஓபிஎஸ் அணி என்று இரண்டாக உடைந்தது. இவர்கள் அனைவரையும் ஒன்று சேருங்கள் என்று டெல்லி பாஜ மேலிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கட்சி பதவிக்காக எந்த தரப்பும் ஒன்று சேர்வதாக இல்லை. இதற்கிடையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜ படுதோல்வியை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று சின்ன சின்ன கட்சிகள், சின்ன சின்ன ஆதரவுகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். 15 தொகுதிகளில் 5 சதவீதம் ஓட்டுகள் வெற்றியை தீர்மானிப்பதாக உள்ளது. அதுவும் தமிழர்கள் ஓட்டுக்களாக உள்ளது. இதனால், இந்த 15 ெதாகுதிகளுக்கும் அதிமுக ஆதரவு தேவை என்று அமித்ஷா எடப்பாடியிடம் பேசினார். ஆனால், எடப்பாடி நாங்களும் நிற்க போகிறோம். 5 தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்திலும் கர்நாடகா தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் வேண்டும் என்று எடப்பாடி கேட்டுள்ளார். பாஜவில் சீட் ஒதுக்கினால், நமக்கு தான் சப்போர்ட் ஆகி விடும். தேர்தல் ஆணையம் ஒழுங்காக இரட்டை இலை சின்னத்தை கொடுத்து விடும் என்று எடப்பாடி சீட் கேட்க ஆரம்பித்தார். அதே நேரத்தில் ஓபிஎஸ்சும் போட்டியிட போவதாக அறிவித்து விட்டார்.

இது பாஜவுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்த பிரதமரை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் 2 பேரும் தனியாக நேரம் கேட்டனர். நேரமும் ஒதுக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலை பிடிக்காததால் இபிஎஸ், ஓபிஎஸ் 2 பேரையும் கடைசி நேரத்தில் அவர்களுடனான பிரதமர் சந்திப்பு ரத்தானது. இந்த விஷயமே கடைசி நேரத்தில்தான் இருவருக்கும் தெரிந்தது. 2 பேரையும் வெளியில் வரும் போது பார்த்து விட்டு, போய்ட்டு வாரேன், போய்ட்டு வாரேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார். டாட்டா மட்டும் காட்டி விட்டு சென்று விட்டார். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலினை 20 நிமிடமும், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனை மட்டும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு பிரதமர் ேமாடி புறப்பட்டு சென்றார். இதனால் அதிமுகவின் 2 தலைவர்களும் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள்.

அண்ணாமலை மீது டெல்லி மேலிடம் கடும் அதிருப்தி: சென்னை வந்த பிரதமரை வரவேற்க தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வரவில்லை. அவருக்கும், டெல்லி மேலிடத்துக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. கூட்டணி விஷயத்தில் தேவையில்லாமல் அண்ணாமலை பேசுவதையும், குழப்பத்தை ஏற்படுத்துவதையும் டெல்லி மேலிடம் ரசிக்கவில்லை என்பது ஒன்று. தமிழக பாஜவுக்கு உள்ளேயும் அண்ணாமலை குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் என்ற புகாரும் இருக்கிறது. அதனால், அண்ணாமலை மீதும் டெல்லி மேலிடம் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அண்ணாமலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சனிக்கிழமை(நேற்று முன்தினம்) காலை 11.40 மணியளவில் சென்னை வருவதாக இருந்தது. இந்த பயணத்தை டெல்லி மேலிடம் திடீரென ரத்து செய்தது. ‘டெல்லியில் இருக்கவும்.

சென்னைக்கு போக வேண்டாம்’ என்று அண்ணாமலைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதமர் மோடியை கூட வரவேற்க போக வேண்டாம் என்ற உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு என்ன காரணம் என்றால், கர்நாடகாவில் சில தொகுதிகளில் அண்ணாமலைக்கு தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே, அங்கு மாவட்ட எஸ்பியாக இருந்தவர். அங்கு யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று அண்ணாமலைக்கு தெரியும். எஸ்பியாக இருந்த போது கணித்து வைத்திருந்த கருத்துப்படி அண்ணாமலை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியுள்ளார். பெரிய தொழில் அதிபர்கள், பணக்காரர்கள் யாருக்கும் சீட் கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் அண்ணாமலையை சந்திக்காதவர்கள், அவரை மதிக்காதவர்கள் என்று யாருக்கும் அண்ணாமலை சீட் வழங்கவில்லை.

இதனால், எங்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்றால், சுயேச்சையாக போட்டியிட போகிறோம் என்று சீட் கிடைக்காதவர்கள் அறிவித்துள்ளனர். சுயேச்சையாக போட்டியிட்டால் நாங்கள் வெற்றி பெற்றி விடுவோம். ஜெயித்து விட்டு மீண்டும் பாஜவில் நாங்கள் சேர்ந்து கொள்கிறோம். அப்படி என்றால் மீண்டும் எங்களை சேர்த்து தானே ஆக வேண்டும் என்று மேலிடத்திடம் சண்டை போட ஆரம்பித்தனர். அவர்களை சமாதானம் செய்ய முடியவில்லை. சீட் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் தனியாக நிற்க போகிறோம் என்று மிரட்ட ஆரம்பித்தனர். அண்ணாமலையிடம் கேட்டால் அவர்களுக்கு சீட் வழங்க கூடாது. அவர்கள் நல்லவர்கள் இல்லை. கொள்ளையடிப்பவர்கள், ஊழல்வாதிகள், மக்களிடம் கெட்ட பெயர் உள்ளது.

இவங்களுக்கு தான் நல்ல பெயர் உள்ளது. இவங்களுக்கு தான் சீட் வழங்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்கிறார். நான் கொடுத்த லிஸ்ட்டை வைத்து தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். சீட் கிடைக்காதவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டால் தாமரை தோற்கும் என்று அவர்களே அடித்து சொல்கிறார்கள். இந்த தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும் என்று பாஜ மேலிடம் கருதுகிறது. அதனால், ஒன்று அண்ணாமலை விட்டு கொடுக்க வேண்டும் அல்லது கர்நாடகாவில் உள்ள தொழில் அதிபர்கள் விட்டு கொடுக்க வேண்டும். இரண்டு பேரும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று சொல்லி வருகிறார்கள். இந்த தகவல் அமித்ஷாவுக்கு போனதால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார். ‘கர்நாடகாவில் ஏற்கனவே அங்கு பாஜ கடும் வீக்காக இருக்கிறது.

இவர்கள் இப்படி பிரச்னை செய்கிறார்களே தவிர, அதை சமாதானமாக முடிக்க தெரியவில்லை. ஒழுங்காக டெல்லியில் இருந்து கொண்டு பேசி முடியுங்கள். தமிழகம் வரும் பிரதமரை பார்க்க போக வேண்டாம். கர்நாடகா பிரச்னையை முடித்துவிட்டு போனால் மட்டும் போதும். ஒரு நேரத்தில் ஒரு வேலை பார்த்தால் போதும், ஏழு வேலை பார்க்க வேண்டாம். உட்கார்ந்து வேலையை பாரு’ என்று அமித்ஷா கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா தேர்தல் தான் எனக்கு முக்கியம். நீ போய் பிரதமரை பார்த்து ஐஸ் வைக்கிறதும், அரசியல் செய்வதும் தேவையில்லை என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

பிரச்னையை தீர்க்கும் வரை டெல்லியை விட்டு போக வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் டெல்லியில் அண்ணாமலை முகாமிட்டு பிரச்னையை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இருந்தாலும் அண்ணாமலை செய்த குழப்பம் தீரவில்லை. அங்கே அண்ணாமலை பிடிவாதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், டெல்லியில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக குழப்பத்தை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தான் அண்ணாமலை சென்னை வராததற்கு காரணம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

The post வெறும் டாடா மட்டும் காட்டி விட்டு பறந்தார் எடப்பாடி, ஓபிஎஸ் மீது மோடி கடும் அதிருப்தி: பிரதமரை வரவேற்க அண்ணாமலை சென்னை வராதது ஏன்? பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Tata ,Edappadi ,Modi ,Annamalai ,Chennai ,AIADMK ,Edappadi Palaniswami ,O. Panneer Selvam ,OPS ,Dinakaran ,
× RELATED டாடா நெக்சான் பேஸ்லிப்ட் கார்கள்