×

மீன்பிடி தடைக்காலம் துவங்கவுள்ள நிலையில் காசிமேட்டில் மீன் விலை உயர்வு

சென்னை: மீன்பிடி தடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் காசிமேடு சந்தையில் மீன் விலை உயர்ந்துள்ளது. ஏராளமான விசை படகுகளில் மீனவர்கள் நேற்று அதிகாலை கரைக்கு திரும்பிய நிலையில் வஞ்சிரம் உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து காசிமேடு சந்தையில் நேற்று அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், பாறை, உள்ளிட்ட மீன்களின் விலை உயர்ந்திருந்ததால் மார்க்கெட் பகுதிகளில் மீன் விற்பனை செய்யும் பெண்கள் ஏலத்திற்கு மீன்களை வாங்க வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன் விற்பனை கடைகள் அதிகமாக காணப்பட்டது.

அதிகாலை 2 மணி முதலே சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மீன் பிரியர்கள் மீன்வாங்க வந்ததால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதி திருவிழாவைப் போல காட்சி அளித்தது. இந்த வாரம் ஏராளமான கடைகள் இருந்ததால் மக்கள் தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர். இதேபோன்று காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மொத்த விலையிலும், சில்லறை விலையிலும் மகிழ்ச்சியுடன் மீன்களை விற்பனை செய்தனர். பெரிய படகுகள், சிறிய விசைப்படகு மட்டும் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்து வந்துள்ளதால், மீனின் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை (கிலோவில்) வஞ்சிரம் ரூ.1,000, கொடுவா ரூ.800, சீலா ரூ.600, சங்கரா ரூ.600, பாறை ரூ.600, இறால் ரூ.500, நண்டு ரூ.500, நவரை ரூ.300, கானாங்கத்தை ரூ.300 என விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த வாரத்தை விட அதிகமாகும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ம் தேதி முதல், ஜூன் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்படி அடுத்த வாரம் மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதால் மீன் விலை வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும்.

The post மீன்பிடி தடைக்காலம் துவங்கவுள்ள நிலையில் காசிமேட்டில் மீன் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Cassimate ,Chennai ,Kasimedu ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...