×

இந்தியாவின் பாதுகாப்புக்கு அடுத்த அச்சுறுத்தல்: கிளிநொச்சி ராணுவ முகாமில் சீன கண்காணிப்பு மையம்; தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு ஆபத்து

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரச் சீனா கடுமையாக முயன்று வருகிறது. இதற்கு முட்டுக்கட்டையாக இந்தியா விளங்குகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படை, விஞ்ஞானம், ஏவுகணை தயாரிப்பு என பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு போட்டியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. அதே நேரத்தில் சீனாவுக்கு எதிரியான அமெரிக்கா மற்றும் ரஷ்யா இந்தியாவுடன் நல்ல நட்புறவை மேம்படுத்த விரும்புகிறது. இது, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் இந்தியாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக சீனா கவனித்து வருகிறது. இதற்காக இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனா அவ்வப்போது தனது உளவு கப்பல்களை அனுப்பி வருகிறது. இந்தியாவை மிக எளிதில் கண்காணிக்க சீனாவுக்கு இலங்கை முக்கிய இடமாக உள்ளது.

இதனால், இலங்கையை தன் வலையில் வீழ்த்த அவர்களுக்கு பல ஆயிரம் கோடி கடன்களை வழங்கி, அந்த நாட்டின் முக்கிய துறைமுகமான ஹம்பாந்தோட்டை துறைமுகம் பகுதிகளை சீனா குத்தகைக்கு எடுத்து உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியால் திவால் நிலைக்கு சென்ற இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்தது. இது, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் இலங்கைக்கு மேலும் கடன்களை வழங்குவதாக அறிவித்து, நெருக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டது. இலங்கையின் பொருளாதார சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்கும் சீனா, ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு உளவு கப்பல்களை அனுப்பி வருகிறது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை இலங்கைக்கு சீனா அனுப்பியது. இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனா உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்திருந்தது. இந்த உளவு கப்பல் மூலம் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களை சுமார் 750 கி.மீ தூரத்துக்கு மேல் கண்காணிக்க முடியும். இதனால், இஸ்ரோ ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டா, மகேந்திரகிரி, ஒடிசா ஏவுகணை தளம் உள்ளிட்ட மையங்களை கண்காணிக்க முடியும். இந்த கப்பலால் தென் மாநிலங்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும். இந்தியா சரியாகத் தனது ஏவுகணைகளைச் சோதனை செய்யும் போது இந்த கப்பலைச் சீனா அனுப்பியது. இந்திய ஏவுகணைகளின் ஆற்றலை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது. இதனால், சீனா உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கூட அப்போது மனக்கசப்பு ஏற்பட்டது. இருந்தும், கடந்தாண்டு டிசம்பர் மாதம் மீண்டும் அதே யுவான் வாங் 5 கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. இந்திய பெருங்கடலில் தொடர்ந்து அச்சுறுத்தலை உருவாக்கி வரும் சீனா, இலங்கையின் கிளிநொச்சி ராணுவ முகாம் அருகே கண்காணிப்பு மையம் அமைக்க உள்ளது. இதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது, இந்தியாவுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி பல ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை ராணுவ முகாம் அமைத்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி செல்லும் வழியில் இயக்கச்சி சந்திப்பில் ஆனையிறவு கிழக்கு திசையில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய அளவில் இந்த ராணுவ முகாம் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனையொட்டி ஒரு கி.மீ தூரத்தில் கடலும், 30 கி.மீ.யில் இரணைமடு விமான தளமும் உள்ளது. சாலை, கடல் மற்றும் ஆகாய மார்க்கத்தை பயன்படுத்தும் அனைத்து வசதிகளுடனும் அமைந்துள்ள ராணுவ முகாமிற்கு அருகே சீனாவின் கண்காணிப்பு மையம் மற்றும் ராணுவ நிபுணர்கள் கேந்திரம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக புதிய ராணுவ முகாம் பகுதியில் 150 ஏக்கர் நிலம் இலங்கை அரசால் ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரு பக்கம் கடலை சுற்றிலும் ராணுவப் படைகளுடன் அமைக்கப்பட்டு வரும் இலங்கை ராணுவ முகாமின் உள்ளே, ஒரு பகுதியில் சீன கண்காணிப்பு மையமும் அமைக்க உள்ளதால் இதனை யாரும் சாதாரணமாக அறிந்து கொள்ளவோ, பார்க்கவோ முடியாது. இங்கிருந்து வான்வழி, கடல் மற்றும் தரைப்பகுதிகளில் சீனா எளிதாக தனது கண்காணிப்பை தொடர முடியும். இந்த பகுதியில் இருந்து 100 கி.மீ தூரத்தில்தான் இந்திய நிலப்பரப்பு அமைந்துள்ளது. இந்திய கடல் பகுதியும் உள்ளது. இதனால் சீன கண்காணிப்பு நிலையத்தினால் எதிர்காலத்தில் இந்திய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கைக்கு மிகவும் அருகில் இருக்கும் இந்தியாவின் தென் மாநிலங்களில் இருக்கும் கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படை தளங்கள், ராணுவ முகாம்களை துல்லியமாக கண்காணிக்கவும், கடற்படை கப்பல்களின் நகர்வுகளையும், இங்குள்ள அணுமின் நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்களையும் எளிதில் கண்காணிக்க முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்திகளும் இலங்கை ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இலங்கை மற்றும் சீனாவின் நகர்வுகள் இருப்பதால், ஒன்றிய அரசு உடனடியாக ராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என அரசியல், ராணுவ நிபுணர்கள் வற்புறுத்துகின்றனர்.

  • பதற்றத்தை உருவாக்க முயற்சி
    இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை ஆக்கிரமித்து சாலைகள், குடியிருப்புகள், ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கான கட்டமைப்பு வசதிகளை சீனா அதிகரித்து வருகிறது. இந்தியாவை ஒட்டிய பாங்காங்க் ஏரியின் இரு கரைகளை இணைக்கும் வகையில் அதன் மீது சீனா பாலத்தை கட்டி வருவது செயற்கைக்கோள் படங்களில் தெரியவந்தது. லடாக், அருணாச்சல் எல்லையில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வரும் சீனா, கடல் வழியாக குடைச்சல் ஏற்படுத்தும் விதமாக இலங்கையை மையமாக கொண்டு கண்காணிப்பு மையம் உள்ளிட்ட நடவடிக்கையை எடுத்து மேலும் பதற்றத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது.
  • அறிவியல் ஆராய்ச்சி மையம் ரேடார் தளம் அமைக்கவும் திட்டம்
    இலங்கையில் 99 ஆண்டுக்கு சீனா குத்தகைக்கு எடுத்துள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு அருகே இலங்கை தென்முனையான தொன்ட்ரா விரிகுடா கடற்பகுதியில் சீனா தனது அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ரேடார் தளத்தை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பதற்றமும், போர் சூழல் அபாயமும் உருவாகும். தொன்ட்ரா கடற்கரையில் இருந்து, இரண்டாயிரம் மைலுக்கு அப்பால் இருக்கும் டிகோ கார்சியா தீவிலுள்ள அமெரிக்க கடற்படை மற்றும் ராணுவ தளங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். இந்திய பெருங்கடலில் செல்லும் கப்பல்களையும் கண்காணிக்க முடியும்.
  • ஒரு பக்கம் இந்தியாவிடம் உதவி மறு பக்கம் சீனாவுக்கு ஆதரவு
    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா பல்வேறு பொருள் மற்றும் நிதியுதவி செய்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ரனில் உள்ளிட்ட அமைச்சர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்தியாவும் உதவுவதாக உறுதியளித்து உள்ளது. இந்தியாவிடம் பல்வேறு உதவிகளை பெற்று வரும் இலங்கை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக சீனாவுக்கு ஆதரவாக உளவு கப்பலுக்கு அனுமதி, கண்காணிப்பு மையத்துக்கு அனுமதி என அடுத்தடுத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
  • அச்சத்தால் உளவு பார்ப்பு
    நாட்டின் மிக வலிமையான ஏவுகணைகளில் ஒன்றான கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-வி ஏவுகணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சோதனை செய்தது. 5,000கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த அக்னி-வி ஏவுகணை விரைவில் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட உள்ளது. இந்த அக்னி வி மொத்தம் 3 நிலைகளைக் கொண்ட தாக்குதல் ஏவுகணையாகும். இந்த ஏவுகணை மூலம் சீனாவின் வடக்குப் பகுதியையும் கூட இந்தியாவால் தாக்க முடியும். இதனால்தான் சீனா அச்சப்பட்டு, உளவு கப்பல்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

The post இந்தியாவின் பாதுகாப்புக்கு அடுத்த அச்சுறுத்தல்: கிளிநொச்சி ராணுவ முகாமில் சீன கண்காணிப்பு மையம்; தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Kilinochchi military ,Tamil Nadu ,China ,Southeast Asian region ,India ,Centre ,Kilinochchi Military Camp ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...