
பல்லாவரம்: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை மற்றும் துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையை இணைக்கும் வகையில் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலை அமைந்துள்ளது. பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலை பகுதிக்கு செல்வதற்கும், ராஜிவ் காந்தி சாலையில் உள்ள ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் பல்லாவரம், குரோம்பேட்டை, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரேடியல் சாலையின் இருபுறமும் பல அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள், ஐடி கம்பெனிகள் அமைந்துள்ளன.
இதனால், எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இதன் காரணமாக, சாலையை இருபுறமும் அகலப்படுத்தி, வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவிலம்பாக்கம், தமிழ்நாடு தீயணைப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகே சாலையின் குறுக்கே கால்வாய் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இருபுறமும் தடுப்பு அமைக்கப்படாமல் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இங்கு, நெடுஞ்சாலை துறை சார்பில் எச்சரிக்கை பதாகைகளோ, தடுப்புகளோ, அபாயம் குறித்த குறியீடுகளோ இல்லாததால் எந்த நேரத்திலும் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து, உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக, அலுவலக நேரம் மற்றும் இரவில் அவ்வழியே செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், பூந்தமல்லி பகுதியில் சாலையோரம் இருந்த கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இரவு நேரத்தில் அடுத்தடுத்து மூன்று பைக்குகள் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்கள் படுகாயமடைந்தனர். அதே போன்று அனகாபுத்தூர் பகுதியில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மாடு ஒன்று தவறி விழுந்தது. எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த கால்வாயின் இருபுறமும் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் தடுப்பு இல்லாத மழைநீர் கால்வாய்: விபத்து பீதியில் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.
